நாடு முழுவதும் டாக்டர்கள் வேலை நிறுத்தத்தால் மருத்துவ பணிகள் பாதிப்பு: நோயாளிகள் கடும் அவதி

நாடு முழுவதும் டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் மருத்துவ பணிகள் பாதிக்கப்பட்டன. இதனால் நோயாளிகள் கடும் அவதியடைந்தனர்.;

Update: 2019-06-14 22:45 GMT
புதுடெல்லி,

மேற்கு வங்காளத்தில் பயிற்சி மருத்துவர்கள் மீது நடந்த தாக்குதலை கண்டித்து நாடு முழுவதும் டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் மருத்துவ பணிகள் பாதிக்கப்பட்டன. இதனால் நோயாளிகள் கடும் அவதியடைந்தனர்.

மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளி ஒருவர் கடந்த 11-ந்தேதி உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், மருத்துவமனையில் பணியாற்றி வரும் 2 பயிற்சி டாக்டர்களை கொடூரமாக தாக்கினர்.

இந்த தாக்குதலை கண்டித்து கொல்கத்தாவில் 12-ந்தேதி முதல் அரசு டாக்டர்கள் போராட்டத்தில் இறங்கினர். இதனால் அதிர்ச்சியடைந்த முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார்.

மம்தாவின் இந்த நடவடிக்கை போராட்டக்காரர்களுக்கு மேலும் ஆத்திரத்தை கொடுத்தது. எனவே அவர்கள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். அங்குள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் 100-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் தங்கள் பணியை ராஜினாமா செய்துள்ளனர்.

மம்தா பானர்ஜி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு, தங்களது 6 கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என டாக்டர்கள் அறிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் டாக்டர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் நேற்று போராட்டம் நடத்த அகில இந்திய மருத்துவ கவுன்சில் அழைப்பு விடுத்தது. இதை ஏற்று நேற்று நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் டாக்டர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவு முற்றிலும் முடங்கியது. பல இடங்களில் பணியில் இருந்த மருத்துவர்களும், தலையில் ஹெல்மெட் அணிந்தும், உடையில் கருப்பு பட்டை அணிந்தும் பணி செய்தனர். டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் பேரணி ஒன்றை நடத்தினர்.

இதைப்போல திருவனந்தபுரம், ஐதராபாத், மும்பை போன்ற நகரங்களிலும் டாக்டர்களின் போராட்டம் மருத்துவ பணிகளை பாதித்தது.

மேலும் செய்திகள்