ஓசூர்- கோவை இடையே புதிய தொழிற்சாலை வழித்தடம் டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்

ஓசூரில் இருந்து சேலம் வழியாக கோவைக்கு புதிய தொழிற்சாலை வழித்தடம் அமைக்க வேண்டும் என்று, டெல்லியில் நடைபெற்ற உயர்மட்டக்குழு கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தியது.

Update: 2019-06-06 22:30 GMT
புதுடெல்லி,

வர்த்தக வாரியம், வர்த்தக வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி குழு ஆகிய அமைப்புகளின் தேசிய அளவிலான உயர்மட்ட குழு கூட்டம் மத்திய ரெயில்வே, தொழில் மற்றும் வர்த்தகத்துறை மந்திரி பியூஸ் கோயல் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் வர்த்தகத்துறை ராஜாங்க மந்திரிகள் ஹர்தீப்சிங் பூரி, சோம் பிரகாஷ் மற்றும் மாநில மந்திரிகள் கலந்து கொண்டனர்.

தமிழகத்தின் சார்பில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தொழில்துறை முதன்மைச் செயலாளர் என்.முருகானந்தம், வேளாண்மைத்துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப்சிங் பெடி, டெல்லியில் தமிழ்நாடு இல்ல முதன்மை உறைவிட ஆணையர் ஹிதேஷ்குமார் எஸ்.மக்வானா ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் இடையே அமைச்சர் எம்.சி.சம்பத் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ரூ.1 லட்சம் கோடிக்கு ஏற்றுமதி

தமிழ்நாட்டில் மொத்தம் 40 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மண்டலங்களில் இருந்து ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த மண்டலங்களுக்கான மத்திய அரசின் சலுகைகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது. எனவே இந்த சலுகையை மேலும் 3 ஆண்டுகள் நீடிக்க வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தினேன்.

சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் 2 முறைகளில் வகைப்படுத்தப்படுகிறது. இதனால் தொழில் தொடங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, இந்த வகைப்பாடு தேவையில்லை என்று கோரிக்கை விடுத்து இருக்கிறேன்.

அதைப்போல விவசாய பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்காக விவசாய பொருட்கள் ஏற்றுமதி நிறுவன அலுவலகத்தை சென்னையில் தொடங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.

தொழிற்சாலை வழித்தடம்

தமிழ்நாட்டில் தற்போது சென்னை-பெங்களூரு, சென்னை-கன்னியாகுமரி ஆகிய இரண்டு தொழிற்சாலை வழித்தடங்கள் (இன்டஸ்டிரியல் காரிடார்) உள்ளன. ஆனால் தொழில்வளம் மிகுந்த மேற்கு பகுதிகள் வழியாக தொழிற்சாலை வழித்தடம் இல்லை. எனவே, ஓசூரில் இருந்து சேலம், நாமக்கல், ஈரோடு வழியாக கோவைக்கு புதிதாக ஒரு தொழிற்சாலை வழித்தடத்தை அமைக்க வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தினோம்.

மேலும் ஜவுளி ஏற்றுமதியை அதிகரிக்க ஐரோப்பிய நாடுகள் உள்பட பிற நாடுகளுடன் தடையில்லா வணிக ஒப்பந்தத்தை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டாம். இந்த ஒப்பந்தம் தமிழகத்துக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இவ்வாறு எம்.சி.சம்பத் கூறினார்.

மேலும் செய்திகள்