பிரதமர் மோடி தலைமையில் முதல்-மந்திரிகள் மாநாடு டெல்லியில் 15-ந் தேதி நடத்த ஏற்பாடு

மத்தியில் புதிய அரசு பதவி ஏற்றுள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் முதல் முறையாக வரும் 15-ந் தேதி முதல்-மந்திரிகள் மாநாடு நடக்கிறது.

Update: 2019-06-05 00:15 GMT
புதுடெல்லி, 

நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி தொடர்ந்து 2-வது முறையாக அமோக வெற்றி பெற்று, மத்தியில் ஆட்சியை தக்க வைத்துள்ளது.

முழுவீச்சில் புதிய அரசு நிர்வாகம்

ஜனாதிபதி மாளிகையில் கடந்த 30-ந்தேதி மாலை நடந்த கோலாகல விழாவில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணியின் புதிய அரசு பதவி ஏற்றது.

மறுநாளில் மந்திரிகளுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், உள்துறை மந்திரி அமித் ஷா, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்ட மந்திரிகள் உடனே பொறுப்பேற்றனர்.

புதிய மந்திரிகள் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து அரசு நிர்வாகம் முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளது.

நிதி ஆயோக்

பாரதீய ஜனதா கூட்டணி அரசின் முதலாவது கால கட்டத்தில் மத்திய திட்டக்குழுவுக்கு பதிலாக நிதி ஆயோக் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்த அமைப்பு, 2015-ம் ஆண்டு, ஜனவரி 1-ந்தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

இதன் தலைவராக பிரதமர் நரேந்திர மோடியும், துணைத்தலைவராக ராஜீவ் குமாரும் உள்ளனர்.

இந்த நிதி ஆயோக்கின் ஆட்சிக்குழுவில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்-மந்திரிகளும், அந்தமான் துணை நிலை கவர்னரும் உள்ளனர்.

15-ந்தேதி நடக்கிறது

இந்த ஆட்சிக்குழுவின் கூட்டம் கடைசியாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் 17-ந்தேதி நடந்தது. இந்த கூட்டத்தில் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்கு ஆக்குவது பற்றியும், மத்திய அரசின் முக்கிய திட்டங்களின் அமலாக்கம் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதிய அரசு பதவி ஏற்றுள்ள நிலையில், முதல்முறையாக நிதி ஆயோக்கின் ஆட்சிக்குழு கூட்டம், டெல்லியில் வரும் 15-ந்தேதி நடக்கிறது.

பிரதமர் மோடி தலைமை

இந்த கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்குகிறார்.

தமிழக முதல்-மந்திரி எடப்பாடி பழனிசாமி, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி, ஆந்திர முதல்-மந்திரி ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்ட அனைத்து மாநில முதல்-மந்திரிகளும் கலந்துகொள்கின்றனர். இதன் காரணமாக இது முதல்-மந்திரிகள் மாநாடாகவும் கருதப்படுகிறது.

நிதி ஆயோக்கின் சிறப்பு அழைப்பாளர்களும், இதில் கலந்துகொள்கிறார்கள்.

இதற்கான அழைப்பு அனைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டு விட்டதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

முக்கிய விவாதப்பொருள்

இந்த மாநாட்டின் கீழ்க்கண்டவை பற்றி விரிவாக விவாதிக்கப்பட உள்ளன.

* நாட்டின் பல மாநிலங்களிலும் நிலவி வருகிற வறட்சி

* தண்ணீர் மேலாண்மை

* நதிகள் இணைப்பு

* நாட்டின் பாதுகாப்பு, பயங்கரவாதிகள் அச்சுறுத்தல்

* மாவோயிஸ்டுகளால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல், அவர்களை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகள்

* மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்துகிற திட்டங்களின் நிலவரம்

இந்த கூட்டத்துக்கான ஏற்பாடுகளை நிதி ஆயோக் உயர் அதிகாரிகள் செய்து வருகின்றனர். கூட்டத்தில் விவாதிக்கப் பட உள்ள அம்சங்கள் இறுதி செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்