இந்தியாவில் கடந்த 65 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக கோடைக்காலத்தில் மிக மோசமான மழையளவு

கடந்த 65 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக கோடைக்காலத்தில் மிக மோசமான மழையளவை பெற்றிருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Update: 2019-06-04 07:17 GMT
புதுடெல்லி

நாடு முழுவதும் இந்த ஆண்டு கோடைக் காலத்தில் 99 மி.மீட்டர் மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது நாடு முழுவதும் கோடைக் காலத்தில் 10 சென்டி மீட்டர்  மழை கூட பெய்யவில்லை.

நாடு முழுவதும் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் மக்கள் குடிநீருக்கே திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

வடமேற்கு இந்தியா, மத்திய இந்தியா, கிழக்கு-வடகிழக்கு இந்தியா மற்றும் தெற்கு தீபகற்பம் ஆகிய நான்கு வானிலை மண்டலங்கள் அனைத்தும் முறையே 30 சதவிகிதம், 18 சதவீதம், 14 சதவீதம் மற்றும் 47 சதவிகிதம் என்று மழையளவை  பதிவு செய்துள்ளன என ஸ்கை மேட் தெரிவித்து உள்ளது.

மழைக்காலத்திற்கு முந்தைய மழை, நேரடியாக "மாம்பழ மழை" என்று குறிப்பிடப்படுகிறது, இது நாட்டின் பல பகுதிகளுக்கு முக்கியமாகும். ஒடிசா போன்ற மாநிலங்களில், மழைக்காலத்திற்கு முந்தைய பருவத்திலும், வடகிழக்கு இந்தியா மற்றும் மேற்குத்தொடர் பகுதிகளில், இது பயிர்களின் பெருந்தோட்டத்திற்கு மிகவும் முக்கியமானதாகும்.

இப்படி ஒரு கடுமையான வறட்சி ஏற்பட்டதற்கு காரணம் பருவமழை முறையாக பெய்யாமல் பொய்த்துபோனதே என கூறப்படுகிறது. வழக்கமாக ஜூன் ஒன்றாம் தேதி தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவ மழை இதுவரை கேரள மாநிலத்தில் தொடங்கவில்லை.

நாளை பருவமழை தொடங்கும் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு கொட்டித்தீர்த்த தென்மேற்கு பருவமழையால் கேரள மாநிலம் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கையும் சேதத்தையும் சந்தித்தது.

அதேபோல் கடந்த ஆண்டு தமிழகத்திற்கு மழைப்பொழிவை தரும் வடகிழக்கு பருவமழை பொய்த்து போனது. இதனால் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் நிலத்தடி நீர்மட்டம் சரிந்து மக்கள் குடிநீருக்கே குடத்துடன் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.

பருவமழை ஏமாற்றிய நிலையில் கோடை மழையாவது கைகொடுக்கும் என எதிர்பார்த்திருந்தனர் மக்கள். வழக்கமாக கோடைக்காலத்தில் வெப்பத்தின் அளவு அதிகரிக்கும் போது வெப்பசலனம் ஏற்பட்டு கோடை மழை கொட்டித் தீர்க்கும். ஆனால் இந்த ஆண்டு கோடை மழையும் கைவிரித்துவிட்டது. இதனால் அன்றாட தேவைக்கு கூட தண்ணீர் இன்றி மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 65 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக கோடைக்காலத்தில் மிக மோசமான மழையளவை பெற்றிருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது இந்த ஆண்டு மார்ச் 1ஆம் தேதி முதல் மே மாதம் 31ஆம் தேதி வரையிலான காலத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகள் வறண்டு போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள 36 துணை வானிலை மையங்களில் 26 வானிலை மையங்கள் மிகவும் குறைந்த மழைளவை பதிவு செய்துள்ளன. 1954ஆம் ஆண்டு ஏற்பட்ட வறட்சியை தொடர்ந்து இரண்டாவது முறையாக இப்படி ஒரு மோசமான வறட்சி ஏற்பட்டுள்ளது.

இந்திய வானிலை மைய அறிக்கையின்படி இந்த ஆண்டு மார்ச் முதல் மே வரையிலான காலத்தில் வெறும் 99 மில்லி மீட்டர் மழையளவு மட்டுமே நாடு முழுவதும் பதிவாகியுள்ளது தெரியவந்துள்ளது. இது சராசரியை விட 23 சதவீதம் குறைவாகும். இந்த மழை சமீப காலத்தில் மிக மோசமான மழையளவாகும்.

டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள தகவலின் படி வடகிழக்கு, வடமேற்கு, மத்திய மற்றும் தென்னிந்திய பகுதிகளில் இந்த ஆண்டு பருவமழைக்கு முந்தைய கால மழை பற்றாக்குறையாக பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகளவாக குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் 80 சதவீத மழை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு, மிசோரம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் 60 சதவீத பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

மத்திய மகாராஷ்டிரா, மரத்வாடா, விதர்பா ஆகிய பகுதிகளில் மற்ற பகுதிகளை காட்டிலும் குறைந்தளவாக 75 சதவீத  மழையளவு குறைந்துள்ளது. இந்த மூன்று பகுதிகளிலும் 10 மிமீக்கு குறைவாகவே மழை பதிவை பெற்றுள்ளது. அதாவது ஒரு சென்டி மீட்டர் கூட மழை பெய்யவில்லை. இதனால் அங்கு கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலை படிப்படியாக உருவாகி வருவதால் நாடு முழுவதும் காற்றுடன் கூடிய மழை நிலைமை இன்றும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை வானிலை மையம் இன்று அறிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்