உலகிலேயே உயரமான சியாச்சினில் உள்ள படை தளத்தை ராஜ்நாத்சிங் பார்வையிட்டார்

சியாச்சினில் உள்ள படை தளத்தை ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று பார்வையிட்டார். தங்கள் பிள்ளைகளை ராணுவத்துக்கு அனுப்பிய பெற்றோர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

Update: 2019-06-03 23:30 GMT
ஸ்ரீநகர்,

உலகிலேயே உயரமான இடத்தில் உள்ள படைத்தளமாக காஷ்மீரின் சியாச்சின் படைத்தளம் விளங்குகிறது. 12 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள அந்த இடத்தில் உறையவைக்கும் குளிரிலும், பலத்த காற்றுக்கு இடையிலும் ராணுவ வீரர்கள் எல்லையை காக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

குளிர்காலத்தில் பனிச்சரிவுகளும், நிலச்சரிவுகளும் அந்த இடத்தில் சர்வசாதாரணமாக நடைபெறும். தட்பவெப்ப நிலையும் மைனஸ் 60 டிகிரிக்கு கீழே செல்லும்.

ராஜ்நாத் சென்றார்

ராஜ்நாத் சிங் அந்த படைத் தளத்துக்கு ராணுவ மந்திரியாக பொறுப்பேற்ற 2-வது நாளான நேற்று சென்றார். அவருடன் ராணுவ தளபதி பிபின் ராவத், வடக்கு கமாண்டிங் அதிகாரி ரன்பீர் சிங் ஆகியோரும் சென்றனர். அங்குள்ள போர் நினைவிடத்தில் ராஜ்நாத் சிங் மலர் வளையம் வைத்து போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.

பின்னர் அங்கு பணியில் உள்ள ராணுவ கமாண்டர்களுடன் பாதுகாப்பு தயார்நிலை குறித்து ஆய்வு செய்தார். ராணுவ வீரர்களுடன் உரையாடிய அவர், வீரர்களுக்கு தேநீர் மற்றும் பிஸ்கட் வழங்கினார். அங்கிருந்து ஸ்ரீநகரில் உள்ள படைத்தளங்களின் தலைமை அலுவலகமான படாமிபாக் கண்டோன்மென்ட் பகுதிக்கு வந்தார். அங்கு ராணுவ அதிகாரிகளிடம், பாகிஸ்தான் ஏதாவது எதிர்பாராத செயலில் ஈடுபட்டாலோ அல்லது தவறான செயல்களில் ஈடுபட்டாலோ அதனை எதிர்கொள்ள இந்தியா தயார்நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

வீரத்தை வணங்குகிறேன்

சியாச்சின் சென்றது பற்றியும், அங்கு பணிபுரியும் ராணுவ வீரர்களின் தியாகம் பற்றியும் ‘டுவிட்டர்’ வலைத்தளம் மூலம் ராஜ்நாத் சிங் கருத்து தெரிவித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

சியாச்சினில் உள்ள நமது ராணுவ வீரர்கள் மிகவும் மோசமான இயற்கை சூழ்நிலை மற்றும் ஆபத்தான நிலப்பரப்பிலும் கூட மிகவும் தைரியத்துடனும், மனோதிடத்துடனும் தங்கள் கடமையை ஆற்றிவருகிறார்கள். அவர்கள் வலிமையையும், வீரத்தையும் வணங்குகிறேன்.

பெற்றோர்களுக்கு நன்றி

நமது தாய் மண்ணை பாதுகாக்க எல்லாவித முயற்சிகளையும் எடுத்துவரும் சியாச்சினில் உள்ள நமது ராணுவ வீரர்களின் சேவைக்காக நான் பெருமிதம் கொள்கிறேன். ராணுவ படைகளில் இணைந்து நமது நாட்டுக்கு சேவைபுரிய தங்கள் பிள்ளைகளை அனுப்பிவைத்த அவர்களது பெற்றோர்களை எண்ணியும் நான் பெருமைப்படுகிறேன். அவர்களுக்கு நான் தனிப்பட்ட முறையில் எனது நன்றியை செலுத்துகிறேன்.

1,100-க்கும் மேற்பட்ட வீரர்கள் அதிகபட்ச தியாகத்துடன் சியாச்சின் சிகரத்தை பாதுகாத்து வருகிறார்கள். அவர்களது சேவைக்காகவும், தியாகத்துக்காகவும் இந்த தேசம் எப்போதும் கடமைப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முன்னாள் மந்திரிகள்

முன்பு ராணுவ மந்திரியாக இருந்த சரத்பவார், ஜார்ஜ் பெர்னாண்டஸ், முலாயம்சிங் யாதவ் மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோரும் சியாச்சின் சிகரத்தில் உள்ள படைத்தளத்தை பார்வையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்