எர்ணாகுளம் மருத்துவமனையில் உள்ள இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது

கேரளாவில் எர்ணாகுளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா கூறியுள்ளார்.

Update: 2019-06-03 09:56 GMT
கேரளாவில் பழந்தின்னி வவ்வால்கள் மூலம் பரவும் நிபா வைரஸ் காய்ச்சல் காரணமாக கடந்த ஆண்டு 17 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கையால் காய்ச்சல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இப்போது மீண்டும் அதுபோன்ற அபாயம் ஏற்பட்டுள்ளது. எர்ணாகுளம் மாவட்டத்தில் வைரஸ் பாதிப்பு அறிகுறிகளுடன் 23 வயது இளைஞர் ஒருவர் கொச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இளைஞரின் ரத்த மாதிரிகள் புனே மற்றும் ஆலப்புழாவுக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் இன்று தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே மாவட்ட நிர்வாகம் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இடுக்கி மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் அந்த இளைஞர் படித்து வருகிறார். அங்கிருந்து திருச்சூரில் உள்ள நிறுவனத்திற்கு இன்டர்ஷிப் சென்றுள்ளார். அவருடன் 22 மாணவர்கள் சென்றுள்ளனர். அங்கிருந்து திரும்பிய போதுதான் காய்ச்சல் வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த பிற மாணவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.  பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கிறோம் என்று கூறியுள்ள அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா, “கொச்சி தனியார் மருத்துவமனையில் இளைஞர் ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளார். அரசு தலையிட்டு மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பியுள்ளது. ஆலப்புழாவில் உள்ள பரிசோதனை மையம் நிபா வைரஸ் என சந்தேகிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக முழுமையாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. நாங்கள் புனே பரிசோதனை மையத்தின் முடிவுக்காக காத்திருக்கிறோம்” என கூறியுள்ளார். 

கடுமையான காய்ச்சல், தசைமூட்டுவலி, தலைவலி, கண் எரிச்சல், தொண்டைவலி, தொடர்ந்து 3 நாட்களுக்கு பிறகு வலிப்பு, மூளை காய்ச்சல் போன்றவை நிபா வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகள் ஆகும். எனவே எந்தமாதிரியான காய்ச்சலாக இருந்தாலும் முறையான சிகிச்சை, தொடர் கண்காணிப்பு ஆகியவைதான் இதன் தடுப்பு நடவடிக்கைகள் ஆகும். 

மேலும் செய்திகள்