காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி தேர்வு

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக்குழு தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.;

Update: 2019-06-01 05:47 GMT
புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்ற பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, புதிய அரசை அமைத்து உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் 52 இடங்களிலேயே வெற்றி பெற்றது. இந்த தோல்வி குறித்து விவாதிப்பதற்காக கடந்த மாதம் கட்சியின் காரியக்கமிட்டி கூடியது.

இதில் கட்சித்தலைவர் பதவியை ராஜினாமா செய்ய ராகுல் காந்தி முன்வந்தார். ஆனால் அவரது முடிவை ஏற்றுக்கொள்ள மறுத்த காரியக்கமிட்டி, கட்சியின் கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்த அவருக்கு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றியது. எனினும் ராகுல் காந்தி தனது ராஜினாமா முடிவில் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் புதிய எம்.பி.க்களின் கூட்டம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று நடந்தது. இதில் கட்சித்தலைவர் ராகுல் காந்தி உள்பட 52 எம்.பி.க்களும், மாநிலங்களவை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். மேலும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட கட்சியின் காரியக்கமிட்டி உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக்குழு தலைவராக, கட்சியின் முன்னாள் தலைவரும், ரேபரேலி தொகுதி எம்.பி.யுமான சோனியா காந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அவரது பெயரை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் முன்மொழிந்தார். இதை ஜார்கண்ட் எம்.பி. ஜோதிமணி, கேரள எம்.பி. சுதாகரன் ஆகியோர் வழிமொழிந்தனர்.

இப்படி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சோனியாவுக்கு மன்மோகன் சிங் உள்பட கட்சியின் முன்னணி தலைவர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினர். மேலும் மக்களவைக்கான கட்சித்தலைவரை தேர்ந்தெடுக்கும் அதிகாரமும் சோனியாவுக்கு அளிக்கப்பட்டது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவரான சோனியா காந்தி, முந்தைய ஆட்சியிலும் கட்சியின் நாடாளுமன்றக்குழு தலைவராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த கூட்டத்தில் உரையாற்றிய சோனியா காந்தி, கட்சித்தலைவர் ராகுல் காந்திக்கும், வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார். அவர் மேலும் கூறியதாவது:-

நெருக்கடியான இந்த தருணத்தில் காங்கிரஸ் கட்சிக்கு முன்னால் ஏராளமான சவால்கள் இருப்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு கூடிய கட்சியின் காரியக்கமிட்டி கூட்டத்தில், கட்சியை பலப்படுத்த பல்வேறு உறுதியான நடவடிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்பட்டன.

அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளை ஆதரித்தும், பிரித்தாளும் நடவடிக்கைகளை எதிர்த்தும் ஒரு ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி செயல்படும். கட்சித்தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் தேவைகளை நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் எழுப்ப வேண்டும். இவ்வாறு சோனியா காந்தி கூறினார்.

நாடாளுமன்றக்குழு தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட சோனியாவுக்கு ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்து உள்ளார். சோனியாவின் தலைமையின் கீழ் காங்கிரஸ் கட்சி வலிமையான எதிர்க்கட்சியாக விளங்கும் என தனது டுவிட்டரில் ராகுல் காந்தி கூறியிருந்தார். காங்கிரஸ் காரியக்கமிட்டி கூட்டத்துக்குப்பின் ராகுல் காந்தி பங்கேற்ற முதல் அதிகாரப்பூர்வ கூட்டம் இதுவாகும்.

மேலும் செய்திகள்