மகா கூட்டணி ஆதரவிலும் பா.ஜனதாவிற்கு எதிராக ராகுலுக்கு தோல்வி முகம்...!
அமேதி தொகுதியில் மகா கூட்டணியின் ஆதரவிலும் பா.ஜனதாவிற்கு எதிராக ராகுல் காந்தி தோல்வி முகம் காணப்படுகிறது.
உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் பாரம்பரிய தொகுதியான அமேதியில் ராகுல் காந்தி போட்டியிட்டார். அவரை எதிர்த்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி களம் இறக்கப்பட்டார். ஸ்மிருதி இரானி தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே அமேதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். இப்போது தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாகவே உள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பின்னடைவை சந்தித்து வருகிறார்.
இருவருக்கும் இடையே கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதுபோன்றே இருக்கிறது. காங்கிரசின் பாரம்பரியமான தொகுதியில் ராகுல் காந்தி பின்னடவை சந்தித்து வருகிறார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஸ்மிருதி இரானியைவிட 25000 வாக்குகள் பின் தங்கியுள்ளார். ஸ்மிருதி இரானி 265792 வாக்குகளையும், ராகுல் காந்தி 237749 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
மாநிலத்தில் பகுஜன் சமாஜ் - சமாஜ்வாடி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டாலும் காங்கிரஸ் கட்சியை அந்தக் கூட்டணியில் சேர்த்துக் கொள்ளவில்லை. எனினும், ராகுல் காந்தியின் அமேதி தொகுதியிலும், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. ராகுல் காந்தி தொகுதியில் மகா கூட்டணி ஆதரவு தெரிவித்தும் ராகுல் காந்திக்கு தோல்வி முகம் காணப்படுகிறது.