மேற்கு வங்காளத்தில் கால் பதித்த பாஜக! -மம்தா அதிர்ச்சி
மேற்கு வங்காளத்தில் பாஜக 2-வது இடத்தை கைப்பற்றி திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது.
கொல்கத்தா,
தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஏறக்குறைய வெற்றி உறுதியாகியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள முன்னணி நிலவரங்கள் அடிப்படையில், தேசிய ஜனநாயக கூட்டணி 346 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் திரிணாமூல் காங்கிரஸ் 22 தொகுதிகளிலும், பாஜக 19 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. மேற்குவங்கத்தில் பாஜக இதுவரை இல்லாத அளவு திரிணாமுல் காங்கிரசுகு அடுத்த இடத்தை கைப்பற்றும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் 34 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எதிர்க்கட்சியான இடதுசாரி கூட்டணி, பாஜக ஆகியவை தலா 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
2014-ம் ஆண்டு தேர்தலில் 17 சதவீத வாக்குகளை வென்ற பாஜக, இம்முறை 2-ஆம் இடத்தில் திரிணாமூல் காங்கிரசுக்கு கடும் சவால் அளித்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் மேற்குவங்கத்தில் பாஜகவின் கணிசமான வளர்ச்சியை இது காட்டுகிறது. அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இடதுசாரிக் கூட்டணியை மூன்றாம் இடத்துக்கு தள்ளி பாஜக 2-ம் இடம் பெற்றது கவனிக்கத்தக்கது.
பாஜக கணிசமாக வெல்லும் என்பதை உணர்ந்த அம்மாநில திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள், பாஜகவுடன் கடுமையாக மோதினர். இதனால், மாநிலத்தில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு இரு கட்சி தொண்டர்கள் இடையே கடும் மோதல் நிலவியது. மக்களவை தேர்தல் முடிவுகள் மூலம், தேசிய அளவில் எதிர்க்கட்சிகளுக்கு பாஜக அதிர்ச்சி அளித்ததைப் போலவே, மாநிலத்திலும் கடும் அதிர்ச்சியை மம்தாவுக்கு பாஜக அளித்துள்ளது.