வாக்கு எண்ணிக்கை எவ்வாறு நடைபெறும்? தேர்தல் அதிகாரிகள் விளக்கம்
நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது தொகுதி வாரியாக வாக்கு எண்ணிக்கை நடக்கும் விதம் குறித்து தேர்தல் அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி,
தமிழகம் முழுவதும் 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். வாக்கு எண்ணிக்கையின் போது ஒரு வேட்பாளருக்கு 16 முகவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். 15 ஆயிரத்து 904 பேர் வாக்குகள் எண்ணும் பணியில் ஈடுபட உள்ளனர். காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். அதற்கு முன்னரே வாக்கு எண்ணிக்கை அதிகாரிகள், முகவர்கள் உள்ளே அமரவைக்கப்படுவார்கள். ஒரு மையத்துக்கு 14 மேஜை, ஒரு மேஜைக்கு ஒரு வேட்பாளருக்கு ஒரு ஏஜெண்ட் என்கிற கணக்கில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.
ஏஜெண்டுகள் காலை உள்ளே சென்றவுடன் வாக்கு எண்ணிக்கை முடியும்வரை வெளியே வர முடியாது. ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் அதற்கான அறிவிப்பு உடனடியாக வெளியிடப்படும். ஓட்டு எண்ணிக்கைக்கான ஒவ்வொரு மையத்திலும் கண்காணிப்பாளர், நுண் பார்வையாளர், வாக்கு எண்ணும் அலுவலர்கள் இருப்பார்கள். வேட்பாளர்களின் முகவர்களிடம் வாக்கு எண்ணும் இயந்திரங்களின் எண், ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களின் எண் ஆகியவற்றைக் காண்பித்த பிறகே ஓட்டு எண்ணிக்கை தொடங்கும்.
வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளை சரிபார்ப்பதற்காக இந்த முறை ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களில் உள்ள சீட்டுகளையும் சேர்த்து எண்ணுவதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில், ஒரு மக்களவை தொகுதிக்குட்பட்ட ஒரு சட்டப்பேரவைக்கு 5 ஒப்புகைச் சீட்டு எந்திரம் என்ற வகையில் விவிபாட் இயந்திரங்களில் உள்ள சீட்டுகளையும் எண்ண வேண்டும்.
ஒவ்வொரு விவிபாட் இயந்திரத்துக்கும் எண் இருக்கும். குலுக்கல் முறையில் அதில் 5 இயந்திரங்கள் தேர்வு செய்யப்பட்டு சீட்டுகள் எண்ணப்படும். இந்தத் தேர்வை வீடியோ படம் எடுப்பார்கள். இதனால் ஓட்டு எண்ணிக்கையில் காலதாமதம் ஆகலாம். வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள ஓட்டுகளை எண்ணிவிட்டு கடைசியில்தான் விவிபாட் இயந்திரத்தில் உள்ள சீட்டுகள் எண்ணப்படும்.வாக்கு எண்ணிக்கையை ஒப்புகைச் சீட்டுடன் சரிபார்க்க வேண்டியதிருப்பதால், ஒவ்வொரு சுற்றின் இறுதியிலும் சற்று காலதாமதமாகவே அறிவிப்பு வெளியாகும். எனவே, தேர்தலின் உத்தேச முடிவை மதியத்துக்குப் பிறகுதான் அறிய முடியும். இறுதி முடிவைப் பெறுவதற்கு இரவு ஆகலாம் என்றே தெரிகிறது.