பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு முகாம்: நாடு முழுவதும் 5 இடங்களில் நடக்கிறது
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஆண்டுதோறும் கோடைகால விடுமுறையையொட்டி சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
புதுடெல்லி,
டெல்லி, மைசூரு, புவனேஸ்வர், போபால் உள்பட 5 இடங்களில் இந்த ஆண்டுக்கான பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. டெல்லியில் நடைபெற்ற பயிற்சி முகாமை சுற்றுச்சூழல் துறை செயலாளர் ரவி அகர்வால் தொடங்கி வைத்தார். அப்போது சுற்றுச்சூழல் பராமரிப்பு மற்றும் விலங்குகளின் செயல்பாடு தொடர்பான புத்தகங்களை அவர் வெளியிட்டார்.
மேலும் கடந்த மாதம் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார். தொடர்ந்து, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பற்றிய திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் டெல்லி தேசிய அருங்காட்சியக இயக்குனர் நாஸ் ரிஸ்வி, விஞ்ஞானி சி.ஆர்.மகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 2 பிரிவுகளில் நடைபெறும் இந்த பயிற்சி முகாம் அடுத்த மாதம் 7–ந்தேதி வரை நடைபெற உள்ளது. 12 வயது வரையிலான மாணவர்கள் டெல்லி மிருகக்காட்சி சாலையில் பயிற்சி பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.