கேதார்நாத்தை தொடர்ந்து பத்ரிநாத் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு

கேதார்நாத்தை தொடர்ந்து பத்ரிநாத் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு செய்தார்.

Update: 2019-05-19 05:47 GMT
பத்ரிநாத்,

நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.  இதில், பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியும் அடங்கும். நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் நேற்று முன்தினம் முடிவடைந்தது. மத்திய பிரதேசத்தில் நேற்று முன்தினம் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி, மாலை டெல்லியில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித் ஷாவுடன் இணைந்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

இந்த நிலையில், பிரதமர் மோடி நேற்று உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் மலையில் உள்ள சிவன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து அரை மணி நேரம் சிவனை வழிபட்டார். 

சாமி தரிசனம் முடிந்து வெளியே வந்த அவர் கோவிலை சுற்றி பார்வையிட்டார். கேதார்நாத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கோவில் அருகே உள்ள பனிக் குகைக்கு சென்று விடிய விடிய தியானம் மேற்கொண்டார். இரவிலும் அங்கு தங்கினார். கடந்த 2 ஆண்டுகளில் 4-வது முறையாக அவர் கேதார்நாத் சென்றுள்ளார்.

இதற்கிடையே, பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், கம்பீரமான மலைகள்! கேதார்நாத் செல்லும் வழியில் எடுத்த புகைப்படங்கள் என சில புகைப்படங்களையும் பதிவிட்டார். 

இதனையடுத்து உத்தரகாண்ட் கேதார்நாத் குகையில் தியானம் மற்றும் கோவிலில் வழிபாடு செய்த பின் பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் கூறுகையில்,

எனக்கும் கேதார்நாத்துக்கும், ஒரு உணர்வுப்பூர்வமான உறவு உள்ளது. கேதார்நாத்தில் வழிபட்டதை நான் அதிர்ஷ்டமாக கருதுகிறேன். கேதார்நாத் வளர்ச்சிக்காக நான் பணியாற்றிக்கொண்டிருக்கிறேன். உங்கள் ஒவ்வொரு ஓட்டும் நாட்டின் வளர்ச்சியை உறுதிப்படுத்தும் என்றார்.

கேதார்நாத் பயணத்தை முடித்ததும் பிரதமர் நரேந்திர மோடி பத்ரிநாத் சென்று அங்கு சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார். பின்னர் மதியம் டெல்லி புறப்பட்டு செல்ல இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்