பா.ஜனதா அரசு ரபேல் விமானங்களின் எண்ணிக்கையை குறைத்து தேச பாதுகாப்பை சமரசம் செய்து கொண்டது - காங்கிரஸ்

பா.ஜனதா அரசு ரபேல் விமானங்களின் எண்ணிக்கையை குறைத்து தேச பாதுகாப்பை சமரசம் செய்து கொண்டது என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.;

Update: 2019-05-14 09:10 GMT
பிரான்ஸ் நாட்டிலிருந்து ரபேல் போர் விமானங்களை வாங்க மத்திய பா.ஜனதா அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. காங்கிரஸ் அரசு 126 விமானங்களை வாங்க பேச்சுவார்த்தை மேற்கொண்ட நிலையில், பா.ஜனதா அரசு அதனை 36 விமானங்களாக குறைத்தது. விமானங்களை வாங்குவதில் ஊழல் என குற்றம்சாட்டும் காங்கிரஸ், எண்ணிக்கையை குறைத்ததையும் விமர்சனம் செய்துள்ளது. இந்நிலையில் நிதிநிலை காரணமாகத்தான் எண்ணிக்கை குறைக்கப்பட்டது என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பேசியுள்ளார். 

மத்திய அரசின் நிதிநிலையை கருத்தில் கொண்டு விமானங்கள் வாங்கும் எண்ணிக்கை 36 ஆக குறைக்கப்பட்டது என தெரிவித்தார் நிதின் கட்காரி. இந்நிலையில் உண்மையான நிலை வெளியாகியுள்ளது என காங்கிரஸ் கூறியுள்ளது. பா.ஜனதா அரசு ரபேல் விமானங்களின் எண்ணிக்கையை குறைத்து தேச பாதுகாப்பை சமரசம் செய்து கொண்டது என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. 

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், “முடிவில், உண்மை வெளியாகிவிட்டது! போலி தேசியவாத மோடி அரசால் தேசிய பாதுகாப்பு சமரசம் செய்யப்பட்டுள்ளது. பணத்தை சேமிப்பதற்காக ரபேல் விமானங்களின் எண்ணிக்கை 126-ல் இருந்து 36 ஆக குறைக்கப்படவில்லை.  இந்திய விமானப்படை மற்றும் நாட்டினரின் பாதுகாப்பு புறந்தள்ளப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் செய்திகள்