அடுத்தடுத்து தொழில்நுட்ப கோளாறு: சென்னை, டெல்லி விமானங்கள் அவசரமாக தரையிறக்கப்பட்டன

நடுவானில் பறந்தபோது அடுத்தடுத்து தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் சென்னை, டெல்லி விமானங்கள் அவசரமாக தரையிறக்கப்பட்டன. இந்த சம்பவங்களில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Update: 2019-05-11 21:30 GMT
மும்பை,

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் எஸ்.ஜி.611 ரகத்தை சேர்ந்த பயணிகள் விமானம் ஒன்று நேற்று காலை 7.30 மணிக்கு மும்பையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டது. 100-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் நடுவானில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானத்தை செலுத்துவதற்கு கடினமாக இருப்பதை விமானி உணர்ந்தார்.

உடனே அவர் மும்பை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு விமானத்தை மீண்டும் அங்கேயே தரையிறக்க அனுமதி கோரினார். இதற்கு விமான நிலைய அதிகாரிகள் அனுமதி கொடுத்ததும், அவசர அவசரமாக விமானம் மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கியது.

அதன் பின்னரே விமானத்தில் இருந்த பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். பின்னர் கோளாறு சரிசெய்யப்பட்டு காலை 10 மணிக்கு விமானம் மீண்டும் சென்னைக்கு புறப்பட்டு வந்தது.

முன்னதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை சேர்ந்த மற்றொரு போயிங் எஸ்.ஜி.8720 ரக விமானம் நேற்று முன்தினம் நள்ளிரவில் பெங்களூருவில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்டது. இந்த விமானத்தில் 153 பயணிகள் இருந்தனர். நடுவானில் பறந்தபோது அந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

இதையடுத்து விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்துக்கு விமானி தகவல் கொடுத்தார். அதன்படி மராட்டிய மாநிலம் நாக்பூரில் விமானத்தை தரையிறக்க அனுமதி கிடைத்தது. உடனே விமானம் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டு நாக்பூர் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. பின்னர் பயணிகள் அனைவரும் மாற்று விமானம் மூலம் டெல்லிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இந்த 2 சம்பவங்களிலும் விமானிகளின் சாமர்த்தியத்தால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஒரே நிறுவனத்தை சேர்ந்த 2 விமானங்களில் அடுத்தடுத்து தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் அதிர்ச்சியில் உறைந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்