அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ மாணவர்களின் கூடுதல் கட்டணத்தை 2 நாளில் திருப்பித்தர வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ மாணவர்களின் கூடுதல் கட்டணத்தை 2 நாளில் திருப்பித்தர வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2019-05-07 22:00 GMT
புதுடெல்லி,

தமிழக அரசின் கீழ் இயங்கும் அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில், அரசு மருத்துவ கல்லூரிகளில் வசூலிக்கும் கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என அமீரா பாத்திமா உள்பட 189 மாணவர்கள் தொடர்ந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மாணவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, மாணவர்களிடம் கூடுதலாக வசூலித்த கட்டணத்தை 15 நாட்களுக்குள் திருப்பித்தர வேண்டும் என்று பல்கலைக்கழகத்துக்கு உத்தரவு பிறப்பித்தது.

அந்த உத்தரவை 4 மாதங்களாக நிறைவேற்றாததால் மாணவர்கள் மீண்டும் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள், கோர்ட்டு உத்தரவை 4 மாதங்களாக ஏன் அமல்படுத்தவில்லை. அதனை உடனடியாக 2 நாட்களுக்குள் அமல்படுத்த வேண்டும். தவறினால் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும், பதிவாளரும் வருகிற 10-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும் செய்திகள்