2016 க்கு முன்பு சர்ஜிக்கல் நடவடிக்கை இல்லை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல்
2016 க்கு முன்பு சர்ஜிக்கல் நடவடிக்கை நடைபெற வில்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்து உள்ளது.
ஸ்ரீநகர்
ஜம்மு காஷ்மீரை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் எழுப்பிய கேள்விக்கு இந்த பதில் கிடைத்துள்ளது.
பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய ராணுவம் சென்று தாக்குதல் நடத்திய சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடவடிக்கையை மோடி அரசு அரசியலாக்குவதாக, குற்றம்சாட்டிய, காங்கிரஸ், மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் 6 முறை சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தப்பட்டதாக கூறியது. இதற்கான தேதி பட்டியலையும் கூட காங்கிரஸ் வெளியிட்டது.
மன்மோகன் சிங் அளித்த ஒரு பேட்டியில் தங்கள் ஆட்சியிலும் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரை சேர்ந்த ரோஹித் சவுத்ரி என்பவர் 2004 ஆம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை நடைபெற்ற சர்ஜிகல் ஸ்ட்ரைக் குறித்த விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டிருந்தார். இதற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது.
அதில் 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் எல்லையில் ஒரு சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தப்பட்டதாக ஆவணம் இருப்பதாகவும், அதற்கு முன்பாக துல்லிய தாக்குதல் நடைபெற்றதற்கான எந்த ஆவணமும் தங்களிடம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த கேள்வி கேட்கப்பட்டது 2018 ஆம் ஆண்டு ஆகும்.
தற்போது சர்ஜிகல் ஸ்ட்ரைக் விவகாரம், சர்ச்சைக்குள்ளாகி வரும் நிலையில், அந்த தகவலை ஊடகங்களிடம் பகிர்ந்துள்ளார் ரோஹித் சவுத்ரி. இதன்மூலம் காங்கிரஸ் சார்பில் உண்மைக்கு மாறான தகவல் பகிரப்பட்டதா, அல்லது துல்லிய தாக்குதல் நடத்தினாலும் கூட, அதை முந்தைய அரசு ஆவணப்படுத்தாமல் விட்டிருந்ததா என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.