முகத்திரை அணிய மாணவிகளுக்கு தடை; முஸ்லிம் கல்வி குழும தலைவருக்கு கொலை மிரட்டல்
கேரளாவில் கல்வி வளாகங்களில் மாணவிகள் முகத்திரை அணிவதற்கு தடை விதித்த முஸ்லிம் கல்வி குழும தலைவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டு உள்ளது.
கோழிக்கோடு,
கேரளாவில் முஸ்லிம் கல்வி சமூகத்தின் தலைவராக பசல் கஃபூர் என்பவர் உள்ளார். கோழிக்கோட்டை அடிப்படையாக கொண்டு இயங்கும் இந்த குழுமம், பள்ளி கூடங்கள் மற்றும் கல்லூரிகள் என 150 கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது.
கடந்த ஏப்ரல் 17ந்தேதி தனது அனைத்து கல்வி நிறுவனங்களின் செயலாளர்கள் மற்றும் முதல்வர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை பசல் அனுப்பியுள்ளார். அதில், நடப்பு 2019-20 கல்வி ஆண்டில் இருந்து வகுப்புகளுக்கு வரும் மாணவிகள் முகத்திரை அணிந்து வர கூடாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கு சில முஸ்லிம் அமைப்புகள் மற்றும் கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், பசலுக்கு மர்ம நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அதில் இந்த சுற்றறிக்கையை திரும்ப பெறவேண்டும் என கூறியுள்ளார். இதுபற்றி போலீசில் பசல் புகார் அளித்துள்ளார். வளைகுடா நாடு ஒன்றில் இருந்து வந்த சர்வதேச அழைப்பு என தனது புகாரில் அவர் தெரிவித்து உள்ளார்.
இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை தினத்தில் 8 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதல்களில் 253 பேர் கொல்லப்பட்ட நிலையில், அங்கு பெண்கள் முகத்திரை அணிய அதிபர் சிறிசேனா தடை விதித்து உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து இந்தியாவிலும் இதுபோன்ற நடைமுறையை பின்பற்ற பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவசேனா கூறியிருந்தது.