ஜனநாயகத்தில் மக்கள்தான் எஜமானர்கள் : என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள், அதை செய்கிறோம் - ராகுல் காந்தி பேச்சு
ஜனநாயகத்தில் மக்கள்தான் எஜமானர்கள். அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறார்களோ, அதை செய்வோம் என்று ராகுல் காந்தி கூறினார்.
ராஞ்சி,
ஜார்கண்ட் மாநிலம் சிம்டகாவில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:–
ஜனநாயகத்தில் மக்கள்தான் எஜமானர்கள். நரேந்திர மோடியோ அல்லது வேறு தலைவரோ எஜமானர் அல்ல. அதனால், காங்கிரஸ் அரசு என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் சொல்லுங்கள், நாங்கள் அதை செய்கிறோம்.
காங்கிரஸ் கட்சி இடம்பெற்ற மகாகூட்டணி, மக்களின் குரலை கேட்கிறது. நான் ‘மனதின் குரலை’ பேச வரவில்லை. நீங்கள் பேசுவதை கேட்க வந்துள்ளேன்.
காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், மாதம் ரூ.12 ஆயிரத்துக்கு குறைவாக வருவாய் ஈட்டும் 5 கோடி குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் ரூ.72 ஆயிரம் வழங்கப்படும். இந்த பணம், அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படுவதை உறுதி செய்வோம்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஆஸ்பத்திரிகளில் ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்துவோம். மாவட்டந்தோறும் தொழில்நுட்ப நிறுவனங்களை அமைப்போம். இதன்மூலம் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
விவசாயிகள் எவ்வளவோ பிரச்சினைகளில் சிக்கித்தவித்த போதிலும், அவர்களின் கடன்களை ரத்துசெய்ய பிரதமர் மோடி முன்வரவில்லை. மோடி அரசு தனக்கு நெருக்கமான 20 பெரும் பணக்காரர்களுக்கு மட்டுமே நல்லது செய்கிறது.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.