மோடியின் நடத்தை விதிமீறலுக்கு ஆதரவு அளிப்பதா? தேர்தல் கமி‌ஷனுக்கு சீதாராம் யெச்சூரி கண்டனம்

பிரதமர் மோடியின், தேர்தல் நடத்தை விதிமீறலுக்கு ஆதரவு அளிப்பதாக கூறி தேர்தல் கமி‌ஷனுக்கு சீதாராம் யெச்சூரி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

Update: 2019-05-01 23:15 GMT

புதுடெல்லி,

மராட்டிய மாநிலம் வார்தாவில் கடந்த மாதம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, வயநாட்டில் சிறுபான்மையினர் அதிகமாக வசிப்பதால்தான் ராகுல் காந்தி அந்த தொகுதியில் போட்டியிடுவதாக கூறினார்.

இது தேர்தல் நடத்தை விதிமீறல் எனக்கூறி காங்கிரசார் தேர்தல் கமி‌ஷனில் புகார் செய்தனர். ஆனால் பிரதமர் மோடியின் இந்த உரையில் நடத்தை விதிமீறல் இல்லை என தேர்தல் கமி‌ஷன் கூறியுள்ளது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, மோடியின் நடத்தை விதிமீறலை தேர்தல் கமி‌ஷன் ஆதரிப்பதாக குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக தேர்தல் கமி‌ஷனுக்கு அவர் எழுதிய கடிதத்தில், ‘மோடியின் தேர்தல் நடத்தை விதிமீறலை தேர்தல் கமி‌ஷன் கையாளும் முறை குறித்து நாடு முழுவதும் அனைத்து தரப்பினரிடமும் கவலை அதிகரித்து வருகிறது’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

பிரதமரின் பிரசாரத்துக்காக பல்வேறு அமைச்சகங்களையும், மாவட்ட நிர்வாகங்களையும் பிரதமர் அலுவலகம் தவறாக பயன்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ள சீதாராம் யெச்சூரி, இந்த விவகாரத்தில் தேர்தல் கமி‌ஷனின் பாராமுகம், குற்றவாளிகளுக்கு தைரியத்தை அளிக்கும் என்றும் தெரிவித்து உள்ளார்.

உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதி பா.ஜனதா வேட்பாளரும், அந்த கட்சியின் நட்சத்திர பேச்சாளருமான நரேந்திர மோடி, தற்போதைய பிரதமர் என்பதற்காக தேர்தல் நடத்தை விதிமுறையில் இருந்து அவருக்கு மட்டும் சலுகை அளிக்க வேண்டுமா? எனவும் அவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

முன்னதாக, இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி கடும் ஏமாற்றத்தை வெளியிட்டு இருந்தது. இது குறித்து அக்கட்சியின் செய்தித்தொடர்பாளரான ரந்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், ‘அரசியல் சாசனத்தின் 324–வது பிரிவு மற்றும் தேர்தல் நடத்தை விதிமீறலில் ஈடுபட்ட பிரதமர் மோடியை வெறுமனே விட்டிருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. தேர்தல் நடத்தை விதிகள் மோடி நடத்தை விதிகளாக மாற்றப்பட்டு இருப்பது இதன் மூலம் தெளிவாகி இருக்கிறது. பிரதமர் மோடிக்கு ஒன்று, மற்றவர்களுக்கு ஒன்று என இருவேறு சட்டங்கள் இருக்க முடியாது’ என்று தெரிவித்தார்.

இதற்கிடையே மோடியின் பிரசாரத்துக்காக பிரதமர் அலுவலகம் தவறாக பயன்படுத்தப்படுவதாக காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் செய்துள்ளது. மோடி பிரசாரம் செய்யும் பகுதிகள் பற்றிய தகவல்களை முன்கூட்டியே அளிக்குமாறு அந்தந்த உள்ளூர் நிர்வாகத்தை பிரதமர் அலுவலகம் வற்புறுத்தி வருவதாகவும், இதுபோன்ற குற்றச்சாட்டில் 40 ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய பிரதமர் இந்திரா காந்திக்கு தடை விதிக்கப்பட்டதாகவும் அந்த புகார் மனுவில் கூறியுள்ளது.

மேலும் செய்திகள்