வாடிக்கையாளரிடம் காகிதப்பைக்கு ரூ.3 வசூலித்த பாட்டா நிறுவனத்துக்கு ரூ.9 ஆயிரம் அபராதம்
வாடிக்கையாளரிடம் காகிதப்பைக்கு ரூ.3 வசூலித்த பாட்டா நிறுவனத்துக்கு ரூ. 9 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சண்டிகார்,
சண்டிகாரை சேர்ந்தவர் தினேஷ் பிரசாத் ராதுரி. இவர் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி சண்டிகார் நகரில் உள்ள பாட்டா நிறுவன ஷோ ரூம் ஒன்றில் ஷூ வாங்கியுள்ளார். இதற்காக தினேஷ் பிரசாத் ராதுரியிடம் இருந்து ரூ.402- ஐ பாட்டா நிறுவனம் வசூலித்தது. இதில், ஷூ பாக்சை கொண்டு செல்வதற்காக வழங்கப்பட்ட காகிதப்பைக்கு ரூ.3 யும் சேர்த்து பாட்டா நிறுவனம் வசூலித்துள்ளது.
காகிதப்பையில், பாட்டா நிறுவனத்தின் பெயரும் இடம் பெற்றுள்ள பட்சத்தில், பைக்கு என தனியாக வசூலிப்பது நியாயமற்றது என்று பிரசாத் ராதுரி ஷோ ரூம் ஊழியர்களிடம் வினவியுள்ளார். ஆனால், அவரது கோரிக்கை நிராகரிக்கப்படவே, சண்டிகாரில் உள்ள நுகர்வோர் ஆணையத்தில் முறையிட்டுள்ளார்.
இவரது முறையீட்டை ஏற்றுக்கொண்ட சண்டிகார் நுகர்வோர் ஆணையம், பாட்டா நிறுவனத்துக்கு ரூ.9 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது. மேலும், பொருட்களை வாங்கும் வாடிக்கையாளருக்கு இலவசமாக பை வழங்க வேண்டியது ஸ்டோரின் கடமை எனவும், பைக்காக கட்டணம் செலுத்த வேண்டும் என்று வாடிக்கையாளரை வற்புறுத்தக்கூடாது என்றும் தெரிவித்து உள்ளது.
நுகர்வோர் ஆணையத்தின் இந்த தீர்ப்பு இந்தியா முழுவதும் செல்லுபடியாகும் என்று டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் சாகர் சக்சேனா தெரிவித்துள்ளார். இது குறித்து சாகர் சக்சேனா கூறும் போது, "இந்த தீர்ப்பை மேற்கோள் காட்டி இந்தியா முழுவதும் உள்ள மக்கள் நிவாரணம் பெறலாம்” என்றார்.