வயநாட்டில் உள்ள திருநெள்ளி கோவிலில் ராகுல் காந்தி சாமி தரிசனம்
கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள திருநெள்ளி கோவிலில் ராகுல் காந்தி வழிபட்டார்.;
வயநாடு,
கேரளா மாநிலத்தில் உள்ள வயநாடு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். வயநாடு தொகுதியில் இன்று தேர்தல் பிரசாரத்தை துவங்கும் ராகுல் காந்தி, திருநெள்ளி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
அங்கே சாமி சந்நிதானம் முன்னிலையில் கீழே விழுந்து கும்பிட்டு சாமி தரிசனம் செய்தார். மேலும், அங்குள்ள பாபநாசினி நதியில் ராஜீவ் காந்தியின் அஸ்தி கரைக்கப்பட்டது. தனது தந்தையின் அஸ்தி கரைக்கப்பட்ட பகுதி என்பதால் அவர் ஆற்றில் திதியும் கொடுத்தார்.
ராகுல் காந்தியுடன் கேரள காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் உள்ளிட்ட நிர்வாகிகளும் உடன் சென்றனர். ராகுல்காந்தி கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியது குறித்து பேசிய கேசி வேணுகோபால், “ கடந்த முறை ராகுல் காந்தி இந்த கோவிலுக்கு வருகை தர திட்டமிட்டு இருந்தார். ஆனால், பாதுகாப்பு கெடுபிடிகள் காரணமாக அவரால் செல்ல முடியவில்லை. கோவில் பூசாரிகள் வழிகாட்டுதல் படி, தனது பாட்டி இந்திரா காந்தி, தந்தை ராஜீவ் காந்தி, உள்பட முன்னோர்களுக்கும் புல்வாமா தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களுக்கும் திதி கொடுத்தார்” என்றார்.
இன்று மாலை ஆலப்புழா மற்றும் திருவனந்தபுரத்தில் ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். கேரளாவில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.