தேர்தலுக்கு பின் தி.மு.க.வுடன் கூட்டணி ஏற்படுமா? பிரதமர் மோடி பதில்
தேர்தலுக்கு பின் தி.மு.க.வுடன் பாரதீய ஜனதா கூட்டணி வைத்துக்கொள்ளுமா? என்ற கேள்விக்கு பிரதமர் மோடி பதில் அளித்தார்.;
புதுடெல்லி,
‘தினத்தந்தி’க்கு மோடி அளித்த சிறப்பு பேட்டியின் போது, மோடியிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–
தி.மு.க.வுடன் கூட்டணி?கேள்வி:– தேர்தலுக்கு பிறகு, தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கப்படுமா?
பதில்:– மக்களவை தேர்தலில் பா.ஜ.க. நிச்சயம் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். முதல்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், அது குறித்த செய்திகள் எங்களுக்கு புது உத்வேகத்தை அளித்து உள்ளது.
முன்பை காட்டிலும் நாங்கள் இன்னும் முன்னேறியதாக நினைக்கிறோம். அருணாச்சலபிரதேசத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கிறோம். முந்தைய தேர்தலை விட அதிக இடங்களில் பா.ஜ.க. நிச்சயம் வெற்றி பெறும். எங்களது கூட்டணி கட்சிகளும் இதேபோல் நிச்சயம் வெல்வார்கள். எனவே அதுபோன்ற ஒரு அவசியம் இருக்காது. அதேசமயம், ஆட்சி அமைப்பது ஒருபுறம் இருந்தாலும் நாட்டை இயக்குவது என ஒன்று உள்ளது. அதற்காக, காங்கிரஸ், தி.மு.க. ஆகிய கட்சிகளின் ஆதரவை கேட்க தயங்க மாட்டோம். ஏனென்றால், நாட்டை இயக்க வேண்டும், மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். இதற்காக, ஒரு உறுப்பினர் கொண்ட கட்சியிடம் கூட ஆதரவு கேட்க தயங்க மாட்டோம். அனைத்துக் கட்சியினரின் ஒத்துழைப்புடன் தான் நாட்டை ஆள வேண்டும். பெரும்பான்மை பெற்றுவிட்டோம் என்ற அகங்காரத்தில் நாட்டை ஆள முடியாது அல்லவா?
எம்.ஜி.ஆர். ஆட்சி கலைப்புகேள்வி:– தமிழ்நாட்டில் பா.ஜ.க. கூட்டணி வைத்துள்ள கட்சிகளான அ.தி.மு.க., பா.ம.க. ஆகியவை மாநிலத்திற்கான லட்சியங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. நீங்களும் ஒரு மாநிலத்தின் முதல்–மந்திரியாக பதவி வகித்துள்ளீர்கள். உங்களுக்கும் அதைப்பற்றி தெரிந்து இருக்கும். அதேசமயம், பா.ஜ.க. தேசிய கட்சியாக உள்ள நிலையில், தேச நலன், மாநிலங்களின் உரிமைகள், லட்சியங்கள் இவற்றை காப்பதில் கருத்து வேறுபாடுகள் நிகழாதா? இதனை எப்படி சமாளிக்கிறீர்கள்?
பதில்:– நாட்டுக்கு பெரும்பாலான இழப்பை ஏற்படுத்தியது காங்கிரஸ் கட்சிதான். 356–வது பிரிவை பயன்படுத்தி, 100–க்கும் மேற்பட்ட முறை மாநில அரசுகளை கலைத்து உள்ளது. முக்கியமாக தமிழகம், ஆந்திரா, கேரளா ஆகிய தென் பகுதியில், ஏன்... எம்.ஜி.ஆர். ஆட்சியை கூட கலைத்து உள்ளது. எனவே தான் இதுபோன்ற நிலை ஏற்பட்டு உள்ளது.
இந்தியாவின் வளர்ச்சிக்கு, மாநிலங்கள் வலிமையுடன் ஒன்றிணைய வேண்டும் என்பது முக்கியமாகும். கூட்டாட்சி முறையை, பாதுகாக்க, மத்திய–மாநில அரசுகள் இடையே ஒரு புரிதல் வேண்டும். அதே சமயம் நாட்டின் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இணைந்து பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
‘நீட்’ தேர்வுகேள்வி:– தமிழகத்தில் நதிநீர் பிரச்சினை, ‘நீட்’ தேர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ளதே?...
பதில்:– எனக்கு தமிழ்நாட்டின் பிரச்சினைகள் தெரியும். பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில், தமிழக பிரச்சினைகளுக்கு தீர்வு கூறி உள்ளோம். எனக்கு தெரிந்தவரை தண்ணீர் பிரச்சினைதான் பிரதானமாக உள்ளது. மழை நீர் சேகரிப்பு, கடல் நீரை குடிநீராக்குவது, நதிநீர் இணைப்பு உள்ளிட்டவற்றிற்காக பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கி, தனி அமைச்சகம் உருவாக்கி தீர்வு காண திட்டமிட்டு உள்ளோம்.
கேள்வி:– காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வறுமையை ஒழிப்போம் எனும் பெயரில் நியாய் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் அளிக்கப்போவதாக கூறி உள்ளனர். இதுபற்றி தங்களது கருத்து என்ன?
பதில்:– நாட்டில் கடந்த 60 ஆண்டுகளாக வறுமை ஒழிக்கப்படவில்லை என்பதை அவர்களே ஒப்புக்கொண்டு உள்ளனர். நியாயத்தை பற்றி பேசுபவர்கள், எம்.ஜி.ஆர். அரசை கவிழ்த்தது, சீக்கிய படுகொலை ஆகியவற்றுக்கு என்ன பதில் கூறப்போகிறார்கள்? இதுபோன்று பல கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டி வரும்.
காங்கிரசின் வாடிக்கைகேள்வி:– வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு பணம் பறிமாற்றம் செய்யப்படும் என்ற திட்டம் பற்றி?
பதில்:– காங்கிரஸ் அரசு செய்ததை சற்று பின்னோக்கி பாருங்கள். கடந்த 2008, 2009–ல் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக கூறினர். ஆனால் அவர்கள் தள்ளுபடி செய்தது வெறும் 52 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே.
இதுதவிர கர்நாடகம், மத்தியபிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் ஆளுகிறது. அங்கு வேலைவாய்ப்புகளை வழங்குவோம் என உறுதி அளித்தனர். ஆனால் ஒரு பணி கூட அங்கு நடைபெறவில்லை. அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. கர்நாடகத்தில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வோம் என அறிவித்தனர். ஆனால் அது பெயரளவிலேயே உள்ளது. தேர்தலுக்காக வாக்குறுதிகளை அள்ளி வழங்குவது காங்கிரஸ் கட்சியின் வாடிக்கை.
கேள்வி:– அப்படியென்றால் ரூ.72 ஆயிரம் வழங்குவோம் என்ற திட்டத்தை காங்கிரஸ் நடைமுறைப்படுத்தாதா?
பதில்:– வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்களா என்பதை விட, காங்கிரஸ் கட்சியை புரிந்து கொள்ளுங்கள். அவர்களின் நடவடிக்கைகளை வைத்து அறிந்து கொள்ளுங்கள்.
கருப்பு பணம்கேள்வி:– கருப்பு பணத்தை மீட்போம் என்பது பா.ஜ.க.வின் முழக்கமாக இருந்தது. நாட்டு மக்களின் வங்கி கணக்கில் தலா ரூ.15 லட்சம் செலுத்துவோம் என மோடி கூறிய பணம் எங்கே? என தற்போது எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றனர். உங்களின் பெரிய நோக்கம் வெற்றி அடையாததற்கு யார் காரணம்?
பதில்:– கருப்பு பணம் மீட்பு விவகாரத்தில் உலக அளவிலான நாடுகளுடன் நாங்கள் ஒப்பந்தம் செய்து உள்ளோம். சுவிஸ் வங்கியுடன் கூட ஒப்பந்தம் செய்து உள்ளோம். அதன்படி, அந்த வங்கியில் யார்–யார் கணக்கு வைத்து உள்ளனர்? எவ்வளவு பணம் டெபாசிட் செய்யப்படுகிறது? யார்–யார் டெபாசிட் செய்கின்றனர்? என்ற விவரங்கள், 2019–ம் ஆண்டுக்கு பிறகு, கிடைத்துவிடும். கடந்த முறை ஆட்சி அமைத்தவுடன் நாங்கள் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து, நடவடிக்கைகளை தொடங்கினோம். காங்கிரஸ் ஆட்சியின் போது உச்சநீதிமன்றம், உத்தரவிட்டும் அவர்கள் குழு அமைக்கவில்லை.
புல்வாமா தாக்குதல்கேள்வி:– புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த விவகாரம் குறித்து பல்வேறு கேள்வி எழுந்து உள்ளது. அமெரிக்கா ஒசாமா பின்லேடனை சுட்டு வீழ்த்தி, சடலத்தை எடுத்து வந்தனர். இந்தியா ஏன் அது போல், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளை, குறிவைக்க இயலவில்லை என சிலர் சந்தேகம் எழுப்புகின்றனர். அது பற்றி தங்களது கருத்து?...
பதில்:– நடவடிக்கை எடுக்க யோசனை இது.
கேள்வி:– மத்திய அரசின் நலத்திட்டங்களால், தமிழ்நாட்டினர் எத்தகைய அளவு பயனடைந்து உள்ளனர் என்பது குறித்து ‘தந்தி’ குழுமம் சார்பில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில் ‘பசல் பீமா யோஜனா’ அதாவது பயிர் காப்பீடு திட்டத்திற்கு பெரும்பாலானோர் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். அதேசமயம், இழப்பீடு கிடைக்க ஒரு வருடம் தாமதம் ஏற்படுவதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்து உள்ளனர். இது குறித்து தங்களது விளக்கம் என்ன?
பதில்:– காலதாமதம் ஏற்பட்டது உண்மைதான். பின்னர் அதற்கான காரணத்தை கண்டறிந்து அதனை சரி செய்துவிட்டோம். அது மட்டுமல்லாமல் தாமதம் ஏற்பட்டால், அதற்குரிய தொகையை அபராதமாக வழங்கவும் உத்தரவிட்டு உள்ளோம். இதுபோல் தமிழகத்தில் மட்டும் ஐந்தாயிரம் கோடி ரூபாய், விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. வளர்ச்சி எங்கு உள்ளதோ அங்கு நன்மையும் நிச்சயம் கிடைக்கும்.
இவ்வாறு மோடி கூறினார்.