ஆந்திரா: அமராவதியில் குடும்பத்துடன் சென்று வாக்களித்தார் சந்திரபாபு நாயுடு

அமராவதியில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் சந்திரபாபு நாயுடு தனது குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்

Update: 2019-04-11 02:55 GMT
அமராவதி, 

ஆந்திர மாநிலத்தில் 25 மக்களவை தொகுதி மற்றும் 175 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவினை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  

அரக்கு நாடாளுமன்ற தொகுதி, அதற்குட்பட்ட சட்டசபை தொகுதிகளை தவிர்த்து பிற இடங்களில் காலை 7 மணிக்கு தொடங்கிய  வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிகிறது. அரக்கு நாடாளுமன்ற தொகுதி, அதற்குட்பட்ட சட்டசபை தொகுதிகளில் சில இடங்களில் காலை 7 மணி முதல் 5 மணி வரையில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. அங்கு ஒரு சில இடங்களில் மட்டும் மாலை 4 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்து விடும்.

ஆந்திராவில் வாக்குப்பதிவு துவங்கியதும், மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். அமராவதியில் உள்ள வாக்குச்சாவடியில் ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கினை பதிவு செய்தார். தனது குடும்ப உறுப்பினர்களுடன் வந்து சந்திரபாபு நாயுடு வாக்களித்தார்.  ஆந்திராவில் ஆளும்  தெலுங்குதேசம் கட்சிக்கும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.

மேலும் செய்திகள்