ஓட்டுக்காக வாக்காளர்கள் முன் நாகின் இசைக்கு நடனம் ஆடிய நாட்டின் பணக்கார எம்.எல்.ஏ.

கர்நாடகாவில் ஓட்டுக்காக வாக்காளர்கள் முன் நாகின் என்ற பிரபல இந்தி படத்தின் பாடலுக்கு நாட்டின் பணக்கார எம்.எல்.ஏ. நடனம் ஆடியுள்ளார்.

Update: 2019-04-10 13:00 GMT
பெங்களூரு,

கர்நாடகாவில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வருகிற 18 மற்றும் 23 ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக நடைபெறுகிறது.

கர்நாடகாவின் வீட்டு வசதி துறை மந்திரியாக இருப்பவர் எம்.டி.பி. நாகராஜ் (வயது 67).  காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர், முன்னாள் மத்திய மந்திரி மற்றும் சிக்கபல்லபுரா மக்களவை தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளரான வீரப்ப மொய்லிக்கு ஆதரவாக ஹோஸ்கொட்டே நகரில் தனது ஆதரவாளர்களுடன் வாகனத்தில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அவருடன் இசை கச்சேரி நடத்தும் குழு ஒன்றும் வாகனத்தில் பின்தொடர்ந்தது.  கடந்த 1954ம் ஆண்டில் நாகின் என்ற இந்தி படம் வெளியானது.  இந்த படத்தில் வரும் ராஜநாகம் ஒன்றை பிடிப்பதற்காக இடம்பெற்ற பாடல் ஒன்று மக்கள் மத்தியில் பிரபலமடைந்தது.

இந்த பாடலை இசை குழுவினர் இசைத்தனர்.  இதனால் ஈர்க்கப்பட்ட நாகராஜ் நடனம் ஆடத்தொடங்கினார்.  இதனை கண்ட அவரது ஆதரவாளர்களும் அவருடன் சேர்ந்து நடனம் ஆடினர்.

இந்த நடனம் 10 நிமிடங்கள் வரை நீடித்தது.  இதன்பின் அவரது வயது முதிர்வை கவனத்தில் கொண்டு ஆதரவாளர்கள் நடன வேகத்தினை குறைக்கும்படி நாகராஜிடம் கேட்டு கொண்டனர்.  இதுபற்றிய வீடியோ வெளியாகி வைரலானது.

கடந்த காலங்களில் ஹோஸ்கொட்டே பகுதியில் நடந்த மத நிகழ்ச்சிகளில் கூட அவர் தனது நடன திறமையை வெளிப்படுத்தி உள்ளார்.  நாட்டின் பணக்கார எம்.எல்.ஏ.வான இவரது சொத்து மதிப்பு ரூ.1,000 கோடி என என்.ஜி.ஓ. அமைப்பு ஒன்று கடந்த வருடத்தில் தெரிவித்திருந்தது.

மேலும் செய்திகள்