பயங்கரவாதத்தை அழிக்க முயற்சிக்கும் என்னை காங்கிரஸ் அகற்ற நினைக்கிறது - பிரதமர் மோடி

பயங்கரவாதத்தை அழிக்க முயற்சிக்கும் என்னை காங்கிரஸ் அகற்ற நினைக்கிறது என பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார்.;

Update: 2019-04-10 10:34 GMT
குஜராத் மாநிலம் ஜுனாகத் நகரில் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி காங்கிரசை கடுமையாக விமர்சனம் செய்தார்.  

பிரதமர் மோடி பேசுகையில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய வீரர்கள் வான்வழித் தாக்குதல் நடத்தினால், அது நமது எதிர்க்கட்சியினரைப் பாதிக்கிறது. நம்முடைய தேசம் பாதுகாப்பாக உணரும்போதுதான் வளர்ச்சி அடையும். இங்கிருந்து பயங்கரவாதத்தை அழிக்க முயற்சி செய்கிறேன். ஆனால் எதிர்க்கட்சிகள் என்னை ஆட்சியில் இருந்து அகற்ற நினைக்கிறார்கள். உங்கள் காவலன், உங்கள் மண்ணின் மைந்தனான எனக்கு எதிராக காங்கிரஸ் கட்சி கூறாத அவச்சொற்கள் கிடையாது.
 
காஷ்மீரை துண்டாட வேண்டும், தனி பிரதமர் வேண்டும் என்பவர்களுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்துள்ளது என்று கூறியுள்ளார். 

மத்திய பிரதேச காங்கிரஸ் முதல்வர் கமல்நாத்தின் உதவியாளர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது, இதில் கோடிக்கணக்கில் பணம் சிக்கியது. இதனை குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் ஏழைகளின் பணத்தை கொள்ளையடிக்கிறது. அக்கட்சி ஆளும் மாநிலங்கள் அனைத்தும், அக்கட்சிக்கு பணம் வழங்கும் ஏடிஎம்களாக மாறிவிட்டன. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வர ஆசைப்படுவது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கத்தான் என சாடியுள்ளார் பிரதமர் மோடி.

மேலும் செய்திகள்