இப்படியெல்லாம் ஓட்டு கேட்கிறீர்களே, வெட்கக்கேடு பிரதமர் மோடி மீது சித்தார்த் தாக்கு

பிரதமர் மோடி ராணுவத்தை வைத்து பிரசாரம் செய்வதை நடிகர் சித்தார்த் விமர்சனம் செய்துள்ளார்.

Update: 2019-04-10 10:04 GMT
பிரதமர் மோடி, பா.ஜனதாவினர் ராணுவத்தை வைத்து பிரசாரம் செய்வதை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

மம்தா பானர்ஜி மோடியை விமர்சனம் செய்கையில், பிரதமர் மோடி உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்கள் மற்றும் இந்தியப் படைகளை வைத்து வாக்குகளை கேட்கிறார். இந்திய ராணுவம் இந்திய மக்களுக்கானது. இந்திய மக்களுக்கான பெருமை புல்வாமா தாக்குதல் தொடர்பாக உளவுத்துறை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்தும் ராணுவ வீரர்கள் உயிரிழந்தது ஏன்? என்பது தொடர்பாக பிரதமர் மோடி முதலில் பதில் அளிக்க வேண்டும் என்றார். இதேபோன்று அரசியல்கட்சி விமர்சனம் செய்து வருகின்றன.

இந்நிலையில் பிரதமர் மோடி பிரசாரத்தில் பேசுகையில், முதல் முறையாக வாக்களிக்க உள்ளவர்களிடம், உங்கள் முதல் ஓட்டை பாலகோட் விமானப்படை தாக்குதல் செய்தவர்களுக்காக அர்ப்பணிக்க முடியுமா?, புலவாமா தாக்குதலில் மரணித்தவர்களுக்காக அர்ப்பணிக்க முடியுமா? என்று கேள்வியை எழுப்பினார். இதனை பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.

நடிகர் சித்தார்த் இப்படியெல்லாமா ஓட்டு கேட்பீர்கள் என பிரதமர் மோடியை விமர்சனம் செய்துள்ளார். 

அரசியல் கட்சிகளை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் விமர்சனம் செய்துவரும் சித்தார்த், “இந்தியாவிற்காக உயிர்நீத்த வீரர்கள், நமது விமானப் படையை வைத்து ஓட்டுக் கேட்கிறார். ஏதோ, இந்திய படைகள்  இவருக்கும், இவரது கட்சிக்கும் மட்டுமே பணி செய்வது போல பேசுகிறார். தேர்தல் ஆணையம் விழித்து கொள்ள வேண்டும். இந்தியாவுக்கு இதை விட தகுதி வாய்ந்தவர்கள் தேவை. ஜனநாயகம் என்பது மாற்றப்படுகிறது. என்ன ஒரு வெட்கக்கேடு” என கடுமையாக சாடியுள்ளார்.

மேலும் செய்திகள்