தமிழகத்தில் ரூ.412.02 கோடி பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல்; தேர்தல் ஆணையம்
தமிழகத்தில் தேர்தலை முன்னிட்டு ரூ.412.02 கோடி பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
2019 நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதன்படி முதற்கட்ட தேர்தல் வருகிற 11ந்தேதி தொடங்குகிறது. தமிழக சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இந்த தேர்தலுடன் சேர்த்து நடத்தப்படுகிறது.
தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் விதிகள் அமலுக்கு வந்தபின் தேர்தல் பறக்கும் படை வாகன சோதனையில் ஈடுபட்டு பணம் மற்றும் பொருட்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து வருகிறது.
நாடு முழுவதும் இதுவரை ரூ.1908.76 கோடி பணம் மற்றும் பொருட்கள் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை ரூ.412.02 கோடி பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.