கேரள காங்கிரஸ் (எம்) கட்சியின் மூத்த தலைவர் கே.எம். மாணி உடல் நல குறைவால் காலமானார்

கேரள காங்கிரஸ் (எம்) கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மந்திரியான கே.எம். மாணி உடல் நல குறைவால் காலமானார்.;

Update: 2019-04-09 13:10 GMT
கொச்சி,

கேரள காங்கிரஸ் (எம்) கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மந்திரியாக இருந்தவர் கே.எம். மாணி (வயது 86).  இவர் உடல்நல குறைவால் கொச்சி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஞாயிற்று கிழமை
சேர்க்கப்பட்டார்.

அவருக்கு ஏற்பட்ட சுவாச கோளாறினை அடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.  இந்நிலையில் இன்று மாலை அவர் உயிரிழந்து விட்டார்.

கேரளாவின் பலா தொகுதியின் எம்.எல்.ஏ.வான அவர், கடந்த காலங்களில் மந்திரியாகவும் பதவி வகித்துள்ளார்.  வருவாய், சட்டம், நீர்ப்பாசனம், நிதி மற்றும் உள்துறைகளின் மந்திரியாக இருந்துள்ளார்.  கேரள சட்டசபையின் நீண்டகால உறுப்பினராக இருந்துள்ள அவர் நிதி மந்திரியாக 13 முறை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

இவருக்கு குட்டியம்மா என்ற மனைவியும், ஜோஸ் கே மாணி (நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்) என்ற மகனும் மற்றும் 5 மகள்களும் உள்ளனர்.  இவரது இறுதி சடங்குகள் வியாழ கிழமை நடைபெற உள்ளன.

மேலும் செய்திகள்