ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 5 வாக்குப்பதிவு எந்திரங்களுடன் ஒப்புகை சீட்டை சரிபார்க்க வேண்டும் : தேர்தல் கமி‌ஷனுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 5 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுடன் ஒப்புகை சீட்டை சரிபார்க்க வேண்டும் என்று தேர்தல் கமி‌ஷனுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2019-04-08 23:45 GMT

புதுடெல்லி,

காங்கிரஸ், தி.மு.க., தெலுங்கு தேசம், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 21 கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தன.

அதில், நாடாளுமன்ற தேர்தலில் சட்டமன்ற தொகுதி வாரியாக ஏதேனும் ஒரு வாக்கு சாவடியில் ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் ஒப்புகை சீட்டுகள் எண்ணப்படும் என்று சமீபத்தில் தேர்தல் கமி‌ஷன் அறிவித்துள்ளது. இதனால் மொத்தம் பதிவான வாக்குகளில் வெறும் 0.44 சதவிகித வாக்குகள் மட்டுமே சரிபார்க்க நேரிடுகிறது. இந்த நடைமுறையால் ஒப்புகை சீட்டு முறையின் நோக்கம் நிறைவேறாமல் வெறும் அலங்காரத்துக்கு மட்டுமே பயன்படும். எனவே, குறைந்தது 50 சதவிகித வாக்குப்பதிவு எந்திரங்களில் ஒப்புகை சீட்டுகளை எண்ண தேர்தல் கமி‌ஷனுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்ஜன் கோகாய், நீதிபதி தீபக் குப்தா ஆகியோர் அமர்வில் கடந்த மார்ச் 25–ந் தேதி விசாரணைக்கு வந்தபோது தலைமை தேர்தல் கமி‌ஷன் இதுகுறித்து பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், ஒப்புகை சீட்டுகள் எண்ணப்படும் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.

அதன்படி கடந்த வாரம் தேர்தல் கமி‌ஷன் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கூறியிருப்பதாவது:–

தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் இதுபோன்று மாற்றங்களை கோரும் மனுக்கள் ஏற்கத்தக்கது அல்ல. தற்போது நடைபெற உள்ள தேர்தலில் ஏற்கனவே கடைப்பிடிக்கப்படும் நடைமுறையே தொடரும் வகையில் இந்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும். பல்வேறு சோதனை முயற்சிகள் மற்றும் ஆய்வுகள் அடிப்படையில் தற்போதுள்ள நடைமுறையே மிகவும் சிறந்தது என்று நிரூபணம் ஆகியுள்ளது.

இந்த மனுவை தாக்கல் செய்துள்ள 21 கட்சிகளும் தற்போதைய நடைமுறை நேர்மையான தேர்தல் நடத்துவதற்கு எந்தவகையில் இடையூறாக உள்ளது என்பது குறித்து எந்த ஒரு குறிப்பிட்ட சம்பவத்தையும் அளிக்கவில்லை. எனவே இந்த மனுக்கள் ஏற்புடையவை அல்ல என்று தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் தலைமை நீதிபதி ரஞ்ஜன் கோகாய் தலைமையிலான அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:–

ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 5 வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளையும் வாக்காளர்களுக்கு வழங்கப்படும் ஒப்புகை சீட்டையும் ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும்.

தற்போதைய நடைமுறையின் மீது நம்பிக்கை இல்லாமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. பெரும்பான்மை மக்களுக்கு தேர்தல் அமைப்பின் மீது நம்பிக்கை ஏற்படுத்துவதற்காகத் தான் இந்த உத்தரவு. இந்த நடைமுறையினால் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஆகாது.

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்