மக்களவை தேர்தல்: பேஸ்புக் விளம்பரத்தில் பாஜக முதலிடம்

மக்களவை தேர்தலை முன்னிட்டு பேஸ்புக்கில் அதிக விளம்பர செய்த கட்சியாக பாஜக திகழ்கிறது.;

Update: 2019-04-08 02:51 GMT
புதுடெல்லி,

இந்தியாவின் 17-வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக ஏறத்தாழ 2 மாதங்களாக நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு, ஆளும் பாரதீய ஜனதா, பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. 

தொலைக்காட்சிகள், பத்திரிகைக உள்ளிட்டவற்றில் அரசியல் கட்சிகள் விளம்பரம் செய்வது போலவே, சமூக வலைதளங்களிலும் இந்த தேர்தலில் அதிக அளவு விளம்பரங்கள் கட்சிகளால் வெளியிடப்படுகின்றன. . இந்தியாவில 20 கோடிக்கும் அதிகமான மக்கள் பேஸ்புக் பக்கத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். எனவே அதை குறிவைத்து அரசியல் கட்சிகள் தங்களது விளம்பரங்களை பேஸ்புக் சமூக வலைதளத்தில் தந்து வருகின்றன.

பேஸ்புக் சமூக வலைதளத்தில் இதுவரை ரூ.10 கோடிக்கும் அதிகமாக தேர்தல் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.  இதில் அதிகபட்ச விளம்பரங்களை தந்து பாஜக முதலிடத்தைப் பிடித்துள்ளது. பாஜக சார்பில் ‘பாரத் கே மன் கீ பாத்’ என்ற பேஸ்புக் பக்கத்தின் கீழ் 3,700 விளம்பரங்கள் தரப்பட்டுள்ளன. இதற்காக ரூ.2.23 கோடி செலவிடப்பட்டுள்ளது. 

பாஜக சார்பில் பல்வேறு பக்கங்கள் உருவாக்கப்பட்டு அதில் விளம்பரங்கள் இடப்படுகின்றன. இதற்காக கோடிக்கணக்கில் செலவழிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் ரூ.5.91 லட்சமும், பிஜு ஜனதா தளம் சார்பில் ரூ.8.56 லட்சமும், தெலுங்கு தேசம் கட்சி சார்பில் ரூ.1.58 லட்சமும், தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் ரூ.58,355-ம் பேஸ்புக் பக்கத்தில் விளம்பரம் செய்ய செலவழிக்கப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்