தெலுங்குதேசம் தலைவர்கள் வீடுகளில் சோதனை மத்திய அரசை கண்டித்து சந்திரபாபு நாயுடு தர்ணா போராட்டம்
தெலுங்குதேசம் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் வீடுகளில் வருமான வரி அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனை நடத்தியதற்காக மத்திய அரசை கண்டித்து முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.;
விஜயவாடா,
ஆந்திர மாநிலத்தில் முன்னாள் மத்திய மந்திரியும், தெலுங்குதேசம் கட்சி எம்.பி.யுமான ஒய்.எஸ். சுஜானா சவுத்ரி, திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவரும், சட்டமன்ற வேட்பாளருமான சுதாகர் யாதவ் ஆகியோர் வீடுகளில் கடந்த 3-ந் தேதி வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். மற்றொரு எம்.பி. ரமேஷ் என்பவர் வீட்டில் நேற்று போலீசார் சோதனை நடத்தினார்கள்.
இந்த தொடர் சோதனைகளை கண்டித்தும், வருமான வரித்துறை போன்ற மத்திய அலுவலகங்களை தவறாக பயன்படுத்தும் மத்திய அரசை கண்டித்தும் தெலுங்குதேசம் கட்சி தலைவரும், முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு நேற்று தும்மலபள்ளி கலாசேத்திரம் அரங்கு முன்பு உள்ள அம்பேத்கர் சிலை அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
முதலில் தன் நலன்
அப்போது சந்திரபாபு நாயுடு பிரதமர் நரேந்திர மோடி, தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர்ராவ், ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் உருவத்துடன் கூடிய கருப்பு பலூன்களை கைகளில் ஏந்தியிருந்தார். அவருடன் விஜயவாடா எம்.பி.யும், வேட்பாளருமான சீனிவாஸ் நானி மற்றும் எம்.எல்.ஏ., எம்.எல்.சி.க்கள் பங்கேற்றனர்.
சுமார் அரை மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்ட சந்திரபாபு நாயுடு, பின்னர் அம்பேத்கர் சிலையிடம் ஒரு மனுவை கொடுத்து போராட்டத்தை முடித்துக்கொண்டார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அத்வானியின் கருத்து அவரது வேதனையின் பிரதிபலிப்பாக இருந்தது. அவர் தனக்கு முதலில் நாடு, இரண்டாவது கட்சி, இறுதியாக தனது நலன் என்று கூறியிருந்தார். ஆனால் மோடிக்கும், அமித்ஷாவுக்கும் இது தலைகீழாக இருக்கிறது. அவர்களுக்கு முதலில் தனது நலன், நாடு கடைசி.
விளைவை சந்திப்பீர்கள்
இப்போது மத்தியில் பாசிச ஆட்சி நடக்கிறது. மோடி ஆட்சியில் அனைத்து சுதந்திரமும் பறிக்கப்பட்டுவிட்டது. அனைத்து தரப்பினரிடமும் அமைதியின்மை, பாதுகாப்பின்மை, அச்சம் காணப்படுகிறது. ஜனநாயகத்தையும், அரசியல்சாசனத்தையும் பாதுகாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்தால் அதிகாரிகள் அதற்கான விளைவை சந்திக்க வேண்டிவரும். மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படாதீர்கள். இந்த சோதனைகளின் பின்னணியில் பா.ஜ.க., டி.ஆர்.எஸ்., ஒய்.எஸ்.ஆர்.சி. ஆகிய கட்சிகளின் சதி உள்ளது. எங்கள் கட்சி தலைவர்களை விரக்தி அடையச்செய்ய வேண்டும் என்பதே அவர்களது நோக்கமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.