ரூ.72 ஆயிரம் வழங்கும் திட்டம்; நடுத்தர மக்களுக்கு சுமை இருக்காது - ராகுல் காந்தி உறுதி
ஏழைகளுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கும் திட்டத்திற்காக நடுத்தர மக்களுக்கு சுமையை ஏற்ற மாட்டோம் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருவாய் உறுதியளிப்பு திட்டம் (நியாய்) செயல்படுத்தப்படும் என ராகுல் காந்தி அறிவித்தார். இதன்மூலம் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் பரம ஏழைகளுக்கு மாதந்தோறும் ரூ.6 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கப்படும் என சமீபத்தில் அவர் அறிவிப்பு வெளியிட்டார்.
இந்த திட்டத்துக்கு மக்கள் மத்தியில் பெருத்த ஆதரவு காணப்படுகிறது. அதேநேரம் இந்த திட்டம் சாத்தியமில்லை என பொருளாதார வல்லுனர்களில் ஒரு சாராரும், சாத்தியமானதுதான் என மற்றொரு பிரிவினரும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் நிதி தேவைக்காக வருமான வரியை உயர்த்தவோ, நடுத்தர மக்களுக்கு சுமை ஏற்றவோ மாட்டோம் என்று ராகுல் காந்தி கூறினார்.
மராட்டிய மாநிலம் புனேவில் மாணவர்களிடையே உரையாற்றிய ராகுல் காந்தியிடம், ஏழைகளுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கான நிதியை எப்படி திரட்டுவீர்கள்? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, நிச்சயமாக, வருமான வரியை உயர்த்த மாட்டோம். நடுத்தர மக்களிடம் இருந்து பணத்தை எடுக்கவோ, அவர்களுக்கு சுமை ஏற்றவோ மாட்டோம். நிதி தேவைக்கு எல்லா வகையான கணக்கீடுகளும் போட்டு பார்த்து விட்டோம்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை, ஏழைகள், விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்டுத்தான் உருவாக்கப்பட்டது என்றார்.