மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்தியாவை சர்வாதிகார நாடாக மோடி மாற்றி விடுவார் மம்தா பானர்ஜி பேச்சு

மோடி மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்தியாவை சர்வாதிகார நாடாக மாற்றி விடுவார் என்று மம்தா பானர்ஜி கூறினார்.;

Update: 2019-04-04 22:30 GMT
கொல்கத்தா,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, மேற்கு வங்காள மாநிலம் கூச்பேகர் மாவட்டம் மாதாபங்கா என்ற இடத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது:-

பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால், அரசியல் சட்டத்தையே தூக்கி எறிந்து விடுவார். இந்தியாவை ஜனநாயக நாட்டில் இருந்து சர்வாதிகார நாடாக மாற்றி விடுவார்.

மோடியின் மூன்று கோஷங்கள், ‘கொள்ளையடி, கலவரம் செய், மக்களை கொல்’ ஆகியவைதான்.

அகதிகளாக மாற்ற முயற்சி

மேற்கு வங்காளத்தில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை கொண்டுவர அனுமதிக்க மாட்டேன். இந்த நாட்டில் யார் இருக்க வேண்டும், யார் வெளியேற வேண்டும் என்று மோடி முடிவு செய்ய முடியாது. தேசிய குடிமக்கள் பதிவேடு என்ற பெயரில், சட்டரீதியான குடிமக்களை அகதிகளாக மாற்ற முயற்சி நடக்கிறது. எனவே, பா.ஜனதாவின் சதித்திட்டம் குறித்து நாம் உஷாராக இருக்க வேண்டும்.

கடந்த தேர்தலுக்கு முன்பு ‘தேநீர் வியாபாரி’ வேடம் போட்டார், மோடி. வாக்குறுதிகளை நிறைவேற்றாததால், மக்களை முட்டாள் ஆக்குவதற்காக ‘காவலாளி’ வேடம் போட்டுள்ளார்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்