மேற்கு வங்காள வளர்ச்சிக்கான பாதையில் ஸ்பீட் பிரேக்கராக இருக்கிறார் மம்தா பானர்ஜி; பிரதமர் மோடி
மேற்கு வங்காள வளர்ச்சிக்கான பாதையில் ஸ்பீட் பிரேக்கராக மம்தா பானர்ஜி இருந்து வருகிறார் என பிரதமர் மோடி தேர்தல் பேரணியில் கூறியுள்ளார்.
சிலிகுரி,
மேற்கு வங்காளத்தின் சிலிகுரி நகரில் நடந்த தேர்தல் பேரணி ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பேசும்பொழுது, புல்வாமா தீவிரவாத தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் நடத்திய இந்தியாவின் விமான படை தாக்குதலுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மற்றும் பிற எதிர்க்கட்சி தலைவர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர்.
ராவல்பிண்டியில் ஏற்பட்ட வலியை விட கொல்கத்தாவில் உள்ள மூத்த சகோதரிக்கு அதிக வலியுணர்வு ஏற்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.
நாட்டின் பிற பகுதிகளில் உள்ளதுபோன்று வங்காளத்தின் வளர்ச்சியை என்னால் உறுதி செய்ய முடியவில்லை. இதற்கு வங்காளத்தில் ஒரு ஸ்பீடு பிரேக்கர் உள்ளது. மூத்த சகோதரியே அந்த ஸ்பீடு பிரேக்கர் என கூறியுள்ளார். மம்தா பானர்ஜியே மூத்த சகோதரி என அன்புடன் அழைக்கப்படுகிறார்.
வங்காள மக்களின் வளர்ச்சிக்கான பாதையில் உள்ள எந்தவொரு தடையையும் நீக்க மம்தாவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து தூக்கி எறிய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.