சூடு பிடிக்கும் மே.வங்காள தேர்தல் களம்: ஒரே நாளில் பிரசாரத்தை துவங்கும் மம்தா, பிரதமர் மோடி
மேற்கு வங்காளத்தில் இன்று தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி துவங்குகிறார். இதே நாளில் மம்தாவும் துவங்குவதால், மே.வங்காள அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
கொல்கத்தா,
பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்காளத்தில் தனது தேர்தல் பிரசாரத்தை இன்று துவங்குகிறார். இன்று ஒரே நாளில் இரண்டு பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களில் மோடி பங்கேற்கிறார். முதலில் மேற்குவங்கம் சிலிகுரியில், மற்றொன்று கொல்கத்தா பரிகேட் மைதானத்திலும் நடைபெறுகிறது.
8 லட்சத்திற்கும் அதிகமான தொண்டர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என பாஜக எதிர்பார்க்கிறது. கடந்த ஜனவரியில் மம்தா பானர்ஜி தலைமையில், மகாகத்பந்தன்' கூட்டணியின் முதல் கூட்டம் இதே பரிகேட் பரேட் மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.
மேற்குவங்கத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில், பாஜக 20 தொகுதிகளை கைப்பற்ற தீவிர முனைப்பு காட்டி வருகிறது.
இதேபோல், மம்தா பானர்ஜி தனது தேர்தல் பிரசாரத்தை ஏப்.4 முதல் துவங்குவார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு நாள் முன்னதாக இன்றே அவரும் தனது பிரசாரத்தை துவங்குகிறார். மோடி பிரசாரம் மேற்கொள்ள உள்ள சிலிகுரியில் இருந்து 170 கிமீ தொலைவில் உள்ள கோச் பேகர் பகுதியில் நடைபெறுகிறது.
இதுகுறித்து பாஜக தலைவர் ராகுல் சின்ஹா கூறும்போது, மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு முன்னதாக பேசினாலும் சரி, அவர் பேசிய பின்பு பேசினாலும் சரி எதுவும் எடுபடாது. மம்தா பானர்ஜி மோடியை கண்டு அஞ்சுகிறார். மோடி பேசினால் மக்கள் அவரது தொண்டர்களாக மாறிவிடுவார்கள் என மம்தா பானர்ஜி கவலையில் உள்ளார் என கூறினார்.