“தேசிய பாதுகாப்பு குறித்து விவாதிக்க தயாரா?” - பிரதமர் மோடிக்கு ராகுல் சவால்

தேசிய பாதுகாப்பு குறித்து விவாதிக்க தயாரா என பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி சவால் விடுத்தார்.;

Update: 2019-04-02 23:15 GMT
புதுடெல்லி,

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை ராகுல் காந்தி நேற்று வெளியிட்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

ஒரு கேள்விக்கு அவர் பதில் அளித்தபோது, பிரதமர் நரேந்திர மோடிக்கு சவால் விடுத்தார்.

அப்போது அவர், “தேசிய பாதுகாப்பு, வெளியுறவு கொள்கை அல்லது ஊழல் பற்றி விவாதிக்க தயாரா என பிரதமர் நரேந்திர மோடிக்கு நான் சவால் விடுகிறேன். ஆனால் அத்தகைய விஷயங்களை எதிர்கொள்ள அவர் பயப்படுகிறார். பெண்கள் பிரச்சினைகள், தேசிய பாதுகாப்பு அல்லது ஊழல் போன்ற உண்மையான பிரச்சினைகள் குறித்து அவர் பேசுவதில்லை” என குறிப்பிட்டார்.

பரம ஏழைகளுக்கான குறைந்த வருமான உறுதி திட்டத்தை செயல்படுத்த முடியாது என்ற பாரதீய ஜனதா கட்சியின் விமர்சனத்தை ராகுல் காந்தி நிராகரித்தார்.

இதுபற்றி அவர் குறிப்பிடும்போது, “ஆமாம். அது செய்ய முடியாதது, பாரதீய ஜனதாவுக்கு. ஆனால் காங்கிரசால் செய்யக்கூடியதுதான்” என்று கூறினார்.

மேலும் செய்திகள்