சபரிமலை கோவில் அமைந்திருக்கும் பத்தனம்திட்டா தொகுதியில் சுரேந்திரன் போட்டி
சபரிமலை கோவில் அமைந்திருக்கும் பத்தனம்திட்டா தொகுதியில் சுரேந்திரன் போட்டியிடுகிறார். போராட்டத்தில் சிறை சென்றவருக்கு பா.ஜனதாவில் ‘சீட்’ கிடைத்துள்ளளது.
புதுடெல்லி,
சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்ததால் கேரளா முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன் தீவிர போராட்டங்களும், வன்முறை சம்பவங்களும் அரங்கேறின. இந்த பிரச்சினையை அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக எடுத்துக்கொண்டு இருக்கும் நிலையில், அதை வைத்து தேர்தலில் ஆதாயம் தேட திட்டமிட்டு வருகின்றன.
இந்த பிரச்சினையின் மையப்புள்ளியாக அமைந்தது அய்யப்பன் கோவில் அமைந்துள்ள பத்தனம்திட்டா மாவட்டம் ஆகும். எனவே இந்த தொகுதியில் கட்சிகளின் வெற்றி எவ்வாறு இருக்கும்? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதற்கு ஏற்றவாறு கட்சிகளும், வேட்பாளர்களும் தேர்வு செய்து வருகின்றன.
அந்த வகையில் தங்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் சுரேந்திரனை வேட்பாளராக்கி உள்ளது, பா.ஜனதா. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சேர்ந்த இவர் சபரிமலை விவகாரத்தில் நடந்த போராட்டத்தில் பங்கேற்றதால் தடுப்புக்காவலில் கைது செய்யப்பட்டு சிறை சென்றவர் ஆவார். அமித்ஷாவின் ஆதரவாளரான இவரை வேட்பாளராக்கியது கட்சியினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.