பிரதமரின் வேளாண் நிதியுதவி திட்டம்: பெயர் சேர்ப்பை நிறுத்த தேர்தல் ஆணையம் உத்தரவு

பிரதமரின் வேளாண் நிதியுதவி திட்டத்தில் புதிதாக பயனாளிகளின் பெயர் சேர்ப்பை நிறுத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-03-23 02:22 GMT
புதுடெல்லி,

பிரதமரின் வேளாண் நிதியுதவி திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மூன்று தவணைகளாக ரூ.2000 டெபாசிட் செய்யும் திட்டத்தில் புதிதாக பயனாளிகளைச் சேர்ப்பதை நிறுத்தி வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே, பெயர் சேர்க்கப்பட்ட விவசாயிகளுக்கு நிதியை அளிப்பதில் எவ்வித சிக்கலும் இல்லை.

நாடு முழுவதும், 2 ஹெக்டேருக்கும் குறைவாக விவசாய நிலம் உள்ள 12 கோடி சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்தது. அந்தப் பணம் மூன்று தவணைகளாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. 

இந்த திட்டத்தை கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இப்போது, மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், இத்திட்டத்தில் புதிதாக விவசாயிகளின் பெயர்களை சேர்ப்பது தேர்தல் நடத்தை விதிமீறலாகும் என்பதால் புதிய பயனாளிகளைச் சேர்கக் கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. 

அதே நேரத்தில் ஏற்கெனவே பெயர் சேர்க்கப்பட்டுவிட்ட விவசாயிகளுக்கு பணத்தை டெபாசிட் செய்ய முடியும். இத்தகவலை மத்திய நிதியமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்