தந்தத்தால் குத்தி தூக்கி வீசியது: கோவில் யானையுடன் செல்பி எடுத்தவருக்கு நேர்ந்த கதி
கோவில் யானையுடன் ‘செல்பி‘ எடுத்தவரை, அந்த யானை தன்னுடைய தந்தத்தால் குத்தி தூக்கி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.;
ஆலப்புழை,
செல்போனில் கேமரா அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து ‘செல்பி‘ எடுக்கும் கலாசாரம் மிக வேகமாக பரவி வருகிறது. பாம்பின் முன் நின்று ‘செல்பி‘ எடுப்பது, ஓடும் ரெயில் அருகே நின்று ‘செல்பி‘ எடுப்பது, கடல் அலைகளின் முன் ‘செல்பி‘ எடுப்பது போன்ற விபரீத செயல்களில் ஈடுபட்டு உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அந்த வகையில் யானையுடன் ‘செல்பி‘ எடுக்கும் ஆசையால் ஒருவர் அந்த யானையால் தாக்கப்பட்ட சம்பவம் கேரள மாநிலத்தில் நடந்துள்ளது. அந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–
ஆலப்புழை அருகே அம்பலப்புழை புன்னக்காடு தேவி கோவில் உள்ளது. இந்த கோவிலின் யானை அங்குள்ள வளாகத்தில் கட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் அங்கு வந்த புன்னப்புரை என்ற இடத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் ரெனீஸ் (40) என்பவர் யானையின் அருகில் சென்று ஆர்வ மிகுதியில் ‘செல்பி‘ எடுக்க முயன்றதாக தெரிகிறது.
அப்போது யானை திடீரென தந்தத்தால் குத்தியதோடு, தும்பிக்கையால் தூக்கி வீசியது. இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. உடனே அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆலப்புழை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்த சம்பவம் குறித்து அம்பலப்புழை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். யானையுடன் ‘செல்பி‘ எடுக்கும் ஆசையால் ஒருவர், அந்த யானையால் தாக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.