கர்நாடக கட்டிட விபத்து: பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரிப்பு, 56 பேர் மீட்பு
கர்நாடக மாநிலம் தார்வார் டவுனில் நேற்று ஏற்பட்ட கட்டிட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் தார்வார் டவுனில் புதிதாக தனியார் வணிக வளாகம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. இந்த வணிக வளாக கட்டிடம் 5 மாடிகளை கொண்டது ஆகும். கட்டிடத்தின் பணிகள் வேகமாக நடந்து வந்தன.
தரைதளம் மற்றும் முதல் மாடி கட்டிட பணிகள் முடிந்து அங்கு பல கடைகள் இயங்கி வந்தன. இந்த நிலையில் நேற்று அந்த வணிக வளாகத்தின் கட்டிட பணியில் தொழிலாளிகள் ஈடுபட்டிருந்தனர். அதோடு அந்த வளாகத்தில் உள்ள கடைகளில் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களும் இருந்துள்ளனர்.
நேற்று மாலை 4 மணி அளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் அந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கட்டிடம் முழுவதும் இடிந்து தரைமட்டமானதால் அப்பகுதி முழுவதும் புழுதி மண்டலமாக காட்சி அளித்தது. அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மற்றும் வணிகவளாக கடைகளில் இருந்தவர்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.
இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் உடனடியாக இதுபற்றி தார்வார் டவுன் போலீசாருக்கும், தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு குழுவினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினரும், மீட்பு குழுவினரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
கட்டிடம் முழுவதும் இடிந்து தரைமட்டமாகி இருந்ததால் தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்பு குழுவினரால் உடனடியாக மீட்புபணியில் ஈடுபட முடியவில்லை. இதனால் பொக்லைன் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு அதன் மூலம் கட்டிட இடிபாடுகளை அகற்றி அங்கு சிக்கியிருந்த தொழிலாளர்களை தீயணைப்பு துறையினரும், மீட்பு குழுவினரும் விடிய விடிய மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
நேற்று 2 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த நிலையில், கட்டிட விபத்தில் சிக்கிய மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன் மூலம் பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கிய 56 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.