சிக்கிக்கொண்டதால் மக்கள் அனைவரையும் பாதுகாவலர் என்கிறார்: மோடியை சாடிய ராகுல் காந்தி
சிக்கிக்கொண்டதால் மக்கள் அனைவரையும் பாதுகாவலர் என்று பிரதமர் மோடி பிரசாரம் செய்கிறார் என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
2014 நாடாளுமன்றத் தேர்தலின் போது பிரதமர் மோடி இந்தியா முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கு மத்தியில் காங்கிரஸ் சிக்கியபோது இந்நாட்டிற்கு காவலாளியாக இருப்பேன் என்று பிரதமர் மோடி பிரசாரம் செய்தார். யாரையும் ஊழல் செய்யவும் விடமாட்டேன். நானும் ஊழல் செய்ய மாட்டேன். இந்த தேசத்தின் காவலாளியாக இருப்பேன் என்றார்.
பிரதமர் மோடி காவலாளியாக இருப்பேன் என்று கூறியதை மையப்படுத்தி அவ்வப்போது காங்கிரஸ் விமர்சனம் செய்கிறது.
ரபேல் விமான ஒப்பந்த ஊழல் விவகாரத்தில் இந்த தேசத்தின் காவலாளியே ஒரு திருடன் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியது. காவலாளி என்பதை திருடன் என்று காங்கிரஸ் குற்றச்சாட்டை முன்வைத்து டுவிட்டரிலும் பிரசாரம் மேற்கொண்டது.
இப்போது காங்கிரசின் இந்த பிரசாரத்தை முறியடிக்கும் வகையில் டுவிட்டரில் பிரசாரம் ஒன்றை 2019 தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி முன்னெடுத்துள்ளார். காவலாளி என்ற பெயரை பொதுமையாக்கிய பிரதமர் மோடி, ஊழல் சமூக கொடுமைக்கு எதிராக போராடும் அனைவருமே காவலாளிதான். இந்தியாவின் வளர்ச்சிக்காக பணியாற்றும் அனைவருமே காவலர்கள்தான். இன்று ஒவ்வொரு இந்தியரும் நானும்கூட காவலாளிதான் என்று கூறுகிறார்கள் என்று கூறினார். இதனையடுத்து பா.ஜனதாவினர் அனைவரும் தங்களுடைய பெயரில் பாதுகாவலர் என சேர்த்துக்கொண்டனர்.
ராகுல் பதிலடி
இந்நிலையில் பிரதமர் மோடி, சிக்கிக்கொண்டதால் மக்கள் அனைவரையும் பாதுகாவலர் என்று பிரசாரம் செய்கிறார் என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
வடக்கு கர்நாடகாவில் பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி, “தன்னை இந்த நாட்டின் பாதுகாவலராக ஆக்குங்கள் என்று பிரதமர் மோடி மக்களிடம் கேட்டுக்கொண்டார். இப்போது இந்த தேசத்தில் உள்ளவர்கள் அனைவரையும் பாதுகாவலர்கள் என்கிறார். இவ்வளவு நாட்களாக யாருக்கு பாதுகாவலராக பணியாற்றினார்?” என கேள்வி எழுப்பினார். அனில் அம்பானி, நிரவ் மோடி, மெகுல் சோக்ஷி போன்றோருக்குதான் பிரதமர் மோடி உதவியுள்ளார் என ராகுல் காந்தி தொடர்ச்சியாக குற்றம் சாட்டியுள்ளார். இப்போது சிக்கிக்கொண்டதும் இந்த தேசத்தையே பாதுகாவலர்கள் என்கிறார் என பிரதமர் மோடியின் நானும் காவலர் பிரசாரத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.