நாட்டின் முதல் லோக்பால் தலைவராக முன்னாள் நீதிபதி பினாகி சந்திர ஜோஷ் நியமனம்
நாட்டின் முதல் லோக்பால் தலைவராக முன்னாள் நீதிபதி பினாகி சந்திர ஜோஷ் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுடெல்லி,
அரசியல்வாதிகள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதான ஊழல் குறித்து விசாரிக்கும் லோக்பால் அமைப்பின் தலைவராக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி பினாகிசந்திரா ஜோஷ் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான நியமனக்குழு இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 ஆண்டுகள் பணியாற்றி 2017-ல் பினாகி சந்திர கோஸ் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2014 ல் லோக்பால் அமைப்பு உருவாக்கப்பட்டது. இதில் நியமனம் செய்ய வேண்டிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கொண்ட குழுவை பிரதமர் தலைமையிலான குழு முடிவு செய்யும். இந்தக்குழுவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி , சபாநாயகர் சுமித்ரா மகாஜனும் அடங்குவர். விரைவில் தலைவர் நியமிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் வலியுறுத்தி இருந்தது.
இந்நிலையில் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி பினாகிசந்திரா ஜோஷ் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒரிரு நாளில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
லோக்பால் தலைவர் நியமனம் குறித்து சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறுகையில், இது மகிழ்ச்சியானது , ஊழலை ஒழிக்க உதவும். ஊழலை வெளிக்கொணர வேண்டும் என்றார்.