எத்தியோப்பியா விமான விபத்து: போயிங் ‘737 மேக்ஸ் 8’ விமானங்களை உடனே தரையிறக்க இந்தியா முடிவு

எத்தியோப்பியா விமான விபத்துக்கு காரணமான போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களை உடனே தரையிறக்க இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2019-03-12 19:55 GMT
புதுடெல்லி,

எத்தியோப்பியாவில் கடந்த 10ந்தேதி போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் தரையிலிருந்து பறக்க தொடங்கிய 6 நிமிடங்களில் கீழே விழுந்ததில் 157 பேர் உயிரிழந்தனர்.

இதே ரக விமானம் கடந்த 5 மாதங்களுக்கு முன் இந்தோனேஷியாவில் தரையிலிருந்து புறப்பட்ட 13 நிமிடங்களில் விழுந்து விபத்து நேரிட்டதில் 189 பேர் பலியாகினர். இரு விமானங்களும் தரையிலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்தில் சிக்கியுள்ளன.

எத்தியோப்பியாவில் விமானம் விபத்துக்குள் சிக்குவதற்கு முன்னதாக விமானி விமானத்தை செலுத்த சிரமமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார். இதனால் விமானத்தின் பாதுகாப்பு கட்டமைப்பு தொடர்பாக சந்தேகம் எழுப்பப்படுகிறது. இதனையடுத்து  போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களை ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் பயன்படுத்த சீனா, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், பிரிட்டன் ஆகிய நாடுகள் தடை விதித்தது.

இந்நிலையில் இந்தியாவிலும் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள் அனைத்தையும் உடனடியாக தரையிறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய விமானப் போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “விமானப் போக்குவரத்துத்துறை இயக்குநரகம் (டி.ஜி.சி.ஏ.) போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களை உடனடியாக தரையிறக்க முடிவு செய்துள்ளது. இந்த விமானங்கள் தேவையான மாற்றங்கள் மற்றும் பாதுகாப்பு உறுதிப்படுத்தல் செய்யும் வரை இயக்கப்படாமல் இருக்கும்” என கூறி உள்ளது.

மேலும் “பயணிகளின் பாதுகாப்பே முதன்மையானது. இந்த பிரச்னை குறித்து தீர்வு காண்பதற்காக சர்வதேச விமான சேவை நிறுவனங்கள் மற்றும் விமான தயாரிப்பு நிறுவனங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம்.” என்றும் டி.ஜி.சி.ஏ. டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்