நரம்புகளில் இந்திய ரத்தம் பாய்ந்தால் படையினர் மீது சந்தேகப்படுவார்களா? - பிரதமர் மோடி ஆவேசம்

“விமானப்படை தாக்குதலுக்கு ஆதாரம் கேட்கிறார்களே, நரம்புகளில் இந்திய ரத்தம் பாய்ந்தால் படையினர் மீது சந்தேகப்படுவார்களா?” என்று பிரதமர் நரேந்திர மோடி ஆவேசமாக கேட்டார்.

Update: 2019-03-09 23:30 GMT
புதுடெல்லி,

நாடாளுமன்றத்துக்கு எந்த நேரத்திலும் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில், உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் நேற்று நடந்த அரசு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பல்வேறு திட்டங்களை தொடங்கிவைத்தார். சில திட்டங்களுக்கு அவர் அடிக்கல்லும் நாட்டினார்.

அந்த வகையில் பண்டிட் தீனதயாள் தொல்லியல் இன்ஸ்டிடியூட்டை திறந்துவைத்தார். நொய்டா சிட்டி சென்டர்-நொய்டா மின்னணு நகர மெட்ரோ ரெயில் திட்டத்தை தொடங்கிவைத்தார். 2 அனல் மின் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

அதைத் தொடர்ந்து நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு ஆவேசமாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

புதிய முறைகள், புதிய கொள்கைகள் அடிப்படையில் இப்போது நாடு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

காஷ்மீர் மாநிலம் உரியில் 2016-ம் ஆண்டு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அவர்கள் புரிகிற மொழியில், முதல்முறையாக துல்லிய தாக்குதல் நடத்தி அவர்களுக்கு பதிலடி கொடுக்கப்பட்டது.

எதுவுமே செய்யாத ஒரு அரசாங்கத்தை நீங்கள் (பொதுமக்கள்) ஏற்றுக்கொள்கிறீர்களா? தூங்குகிற பிரதமரை ஏற்கிறீர்களா?

உரி தாக்குதலை தொடர்ந்து துல்லிய தாக்குதல் நடத்தியதற்கு ஆதாரம் கேட்டார்கள்.

இதற்கு முன் செய்யாததை நமது வீரர்கள் செய்தார்கள். பயங்கரவாதிகளை அவர்கள் குடியிருப்பிலேயே போய் தாக்கினார்கள். அத்தகைய நடவடிக்கையை பயங்கரவாதிகளும், அவர்களது பாதுகாவலர்களும் எதிர்பார்க்கவில்லை. இந்தியா ஒரு முறை துல்லிய தாக்குதல் நடத்தினால், மீண்டும் அவ்வாறு தாக்கும் என்று அவர்கள் கருதினார்கள். எனவேதான் அவர்கள் எல்லையில் படைகளை அமர்த்தினார்கள். ஆனால் இந்த முறை நாம் வான்வழியே சென்றோம்.

26-ந் தேதி பொழுது விடிவதற்கு முன்பாக வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தியா நிலைமையை அமைதியாக கண்காணித்துக்கொண்டிருந்தது.

காலை 5 மணிக்கு மோடி எங்களை தாக்கி விட்டார் என்று பாகிஸ்தான் ஒப்பாரி வைக்கத்தொடங்கியது. நாம் இந்தியாவை காயப்படுத்தலாம்; பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தலாம்; மறைமுகப்போர் நடத்தலாம்; அவர்கள் பதிலடி தர மாட்டார்கள் என்று பாகிஸ்தான் கருதியது உண்டு.

இந்தியாவின் எதிரிகள் இப்படி நினைப்பதற்கு காரணம், 2014-ம் ஆண்டுக்கு முன்பு இங்கு ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படுகிற ஒரு அரசு இருந்ததுதான்.

இப்போது சில அரசியல்வாதிகள் சர்ச்சைக்கிடமான கருத்துக்களை கூறினார்கள். அது பாகிஸ்தானில் அவர்களுக்கு கைதட்டல்களை பெற்றுத்தந்தது. அவர்களை நீங்கள் அடையாளம் கண்டுகொள்ளுங்கள்.

விமானப்படை நடத்திய தாக்குதலுக்கு ஆதாரம் கேட்கிறார்களே, தங்கள் நரம்புகளில் இந்திய ரத்தம் ஓடுகிறவர்கள் என்றால் நமது படையினர் மீது சந்தேகப்படுவார்களா? பாரத மாதாவுக்கு ஜே என்று சொல்கிறவர்கள் சந்தேகப்படுவார்களா? இவர்கள் யார்? அவர்கள் மீது நீங்கள் நம்பிக்கை வைப்பதா, வேண்டாமா என்பதை நீங்கள் தீர்மானியுங்கள்.

இன்றைக்கு ஊழல்வாதிகள் ஒவ்வொருவருக்கும் மோடியுடன் பிரச்சினை. இந்த காவலாளியை தவறாக பேசுவதற்கு அவர்கள் இடையே போட்டி போடுகிறார்கள். என்னை தவறாக பேசினால் தங்களுக்கு ஓட்டு கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால் எனக்கு நாட்டின் 130 கோடி மக்களின் ஆசி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்