பாகிஸ்தானின் ஆளில்லா உளவு விமானத்தை இந்திய ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியதாக தகவல்

பாகிஸ்தானின் ஆளில்லா உளவு விமானத்தை இந்திய ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Update: 2019-03-09 10:17 GMT
ஜெய்பூர்,

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் பலர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தியாவும் அதற்கு சரியான பதிலடி கொடுத்து வருகிறது. அவ்வப்போது இந்திய நிலைகளை கண்காணிக்க உளவு விமானங்களையும் இந்திய எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் அனுப்பி வருகிறது.

சமீபத்தில் அப்படி வந்த இரண்டு உளவு விமானங்களை இந்திய பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர். இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் ராஜஸ்தான் எல்லை பகுதியில் ஸ்ரீகங்காநகர்  அருகிலுள்ள ஹிந்துமால்கோட்டில் பாகிஸ்தானின் உளவு விமானம் நுழைந்தது. இதைக் கண்ட இந்திய பாதுகாப்பு படையினர் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். 

இதையடுத்து அந்த உளவு விமானம் பாகிஸ்தானை நோக்கி திரும்பிச் சென்று விட்டது. மீண்டும் இந்திய எல்லைக்குள்  வந்த  பாகிஸ்தானின் உளவு விமானத்தை இந்திய ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பிப்ரவரி 26  விமானப்படை தாக்குதலுக்கு பிறகு சுட்டு வீழ்த்தப்பட்ட 3-வது உளவு விமானம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானின் தொடர் கண்காணிப்பால் இந்திய எல்லைப்பகுதிகளை பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது..

மேலும் செய்திகள்