பாகிஸ்தானில் 22 பயங்கரவாத முகாம்கள் செயல்படுகிறது

பாகிஸ்தான் விமானப்படையின் எத்தகைய அச்சுறுத்தலையும் சந்திக்க முழு தயார் நிலையில் இருக்கிறோம் என்று இந்திய விமானப்படை கூறியுள்ளது.

Update: 2019-03-08 10:42 GMT

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் முகாமை இந்திய விமானப்படை தாக்கி அழித்தது. அதையடுத்து, இந்திய பகுதிக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் போர் விமானத்தை இந்திய விமானி அபிநந்தன் சுட்டு வீழ்த்தினார்.

இத்தகைய சம்பவங்களால், இந்தியா–பாகிஸ்தான் இடையே பதற்றம் நீடித்து வருகிறது. பாகிஸ்தான் விமானப்படையின் எத்தகைய அச்சுறுத்தலையும் சந்திக்க முழு தயார் நிலையில் இருக்கிறோம் என்று இந்திய படைகள் தெரிவித்தது.
  
இதற்கிடையே பயங்கரவாத இயக்கங்களுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளது போன்று காட்டிக் கொள்கிறது. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹிபீஸ் சயீது தலைமையிலான ஜமாத் உத் தவா, அதன் அறக்கட்டளையான பலா இ இன்சானியாத் பவுண்டேசன் ஆகியவற்றை பாகிஸ்தான் அரசு தடை செய்துள்ளது. அவற்றின் சொத்துகளை முடக்கி உள்ளது.

இந்நிலையில், லாகூரில் உள்ள ஜமாத் உத் தவா தலைமையகத்துக்கு பாகிஸ்தான் அரசு நேற்று ‘சீல்’ வைத்தது. 40 கி.மீ. தொலைவில் உள்ள அறக்கட்டளையின் தலைமையகத்துக்கும் ‘சீல்’ வைக்கப்பட்டது.

இந்த நடவடிக்கையை முன்கூட்டியே அறிந்து, ஹபீஸ் சயீது தனது ஆதரவாளர்களுடன் தலைமையகத்தை விட்டு வெளியேறி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 44 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியது.

இந்நிலையில் பாகிஸ்தானில் 22 பயங்கரவாத முகாம்கள் செயல்படுகிறது என இந்திய அதிகாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 9 முகாம்கள் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் முகாம்களாகும் என இந்திய அதிகாரி அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் சர்வதேச சட்டத்தின்படிதான் இந்தியா நடவடிக்கையை எடுத்தது, பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இந்தியா நடவடிக்கையை எடுக்கும் என கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்