ரெயில்வே தேர்வு : 100க்கு 354 மதிப்பெண் : ரெயில்வே துறை விளக்கம்

வெளியான ரெயில்வே தேர்வு முடிவுகளில் 100க்கு 354 மதிப்பெண் என வெளியான தகவல்கள் குறித்து ரெயில்வே துறை விளக்கம் அளித்து உள்ளது.

Update: 2019-03-07 07:20 GMT
புதுடெல்லி,

கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் டிசம்பர் வரை பல கட்டங்களாக ரெயில்வே தேர்வுகள் இந்தியா முழுவதும் 16 மண்டலங்களில் நடைபெற்றன. இதன் முடிவுகள் மார்ச் 4 ஆம் தேதி வெளியானது . இந்த முடிவுகளில்   தமிழகத்தில் உள்ள பணி இடங்களுக்கு அதிகமான அளவு வட இந்தியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதிலும் 100 மதிப்பெண்களுக்கு 120, 354 மதிப்பெண்கள் என பெற்று அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தமிழக ரெயில்வே வேலைகளுக்காக பிரத்தியேகமாக நடைபெறும் இந்த தேர்வில் தமிழகத்தை பற்றிய கேள்விகளே அதிகம் இருக்கும். அப்படி இருக்கும் போது எப்படி வடமாநிலத்தவர்கள் தமிழர்களை விட அதிகம் தேர்ச்சி பெற முடியும் என சர்ச்சை எழுந்தது.

அதிலும் மொத்த மதிப்பெண்களே 100 எனும்போது எப்படி 120, 354 என்று மதிப்பெண்கள் எடுக்க முடியும் என கேள்விகள் எழுப்பப்பட்டன. இந்நிலையில் இதுகுறித்து தற்போது ரெயில்வே அமைச்சகம் பதிலளித்துள்ளது.

அதில், நார்மலிசேசன் முறைப்படி மதிப்பெண் கணக்கிடப்படுவதால் மதிப்பெண்கள் இவ்வாறு வந்துள்ளன, அதை முறைகேடாக கருத வேண்டாம் என ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தேர்வுகள் வெவ்வேறு நாட்களில், வெவ்வேறு வினாத்தாள்களை கொண்டதால், கடினமான மற்றும் எளிதான வினாத்தாள்களிடையே உள்ள வேறுபாட்டை நீக்க நார்மலிசேசன் முறை கடைபிடிக்கப்படுவதாகவும், 19 வருடங்களாக இதே முறையை தான் பின்பற்றி வருவதாகவும் ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்