‘திருமணத்துக்கு முந்தைய உறவால் எச்.ஐ.வி. பரவும்’ கேரள பாடப்புத்தகத்தில் தகவல்
‘திருமணத்துக்கு முந்தைய உறவு அல்லது தகாத உறவால்’ எச்.ஐ.வி. பரவும் என கேரள பாடப்புத்தகத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் 10–ம் வகுப்பு மாணவர்களின் உயிரியியல் பாடப்புத்தகத்தில் ‘நோய் தடுப்பு முறைகள்’ என்ற ஒரு பாடம் இடம்பெற்று உள்ளது.
இதில் எச்.ஐ.வி. வைரஸ் பரவும் முறைகள் குறித்த கேள்விக்கு சில விடைகள் கொடுக்கப்பட்டு உள்ளன. இதில் பல்வேறு சரியான பதிலுக்கு மத்தியில் ‘திருமணத்துக்கு முந்தைய உறவு அல்லது தகாத உறவால்’ எச்.ஐ.வி. பரவும் என்ற தவறான விடையும் கூறப்பட்டு இருந்தது. கடந்த 2016–ம் ஆண்டு முதலே இந்த பாடம் 10–ம் வகுப்பில் இடம்பெற்று இருந்த போதும், இந்த தவறை யாரும் கண்டுபிடிக்கவில்லை. இப்போது பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் அருண், புத்தகத்தில் இடம்பெற்று இருந்த தகவலை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இதனையடுத்து வெகுவாக இந்த புகைப்படம் விசர்சனங்களுடன் பகிரப்பட்டது. இதைப்பார்த்து கல்வியாளர்கள், டாக்டர்கள் மற்றும் விஞ்ஞானிகள் கடும் அதிர்ச்சியும், அதிருப்தியும் வெளியிட்டனர். அத்துடன் இந்த தவறு குறித்து மாநில கல்வி ஆய்வு மற்றும் பயிற்சி கவுன்சிலுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்த தவறை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அடுத்த கல்வியாண்டுக்கான பாடப்புத்தகத்தில், இந்த தவறை களையும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு உள்ளதாக மாநில கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.