பஞ்சாப் நேசனல் வங்கி மோசடி வழக்கு குற்றவாளி நிரவ் மோடியின் பங்களா இடிப்பு
பஞ்சாப் நேசனல் வங்கி மோசடி வழக்கு குற்றவாளியான நிரவ் மோடியின் பங்களாவை அதிகாரிகள் இடித்து தள்ளினர்.;
ராய்காட்,
பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்ஷியும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்து, இந்தியாவைவிட்டு வெளியேறிவிட்டனர். வங்கி மோசடி தொடர்பாக சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை உள்ளிட்ட விசாரணை முகமைகள் விசாரணையை மேற்கொண்டு வருகின்றன.
நிரவ் மோடியை நாடு கடத்துமாறு சி.பி.ஐ. மற்றும் அமலாக்க துறை அதிகாரிகள் சார்பில் இங்கிலாந்து அதிகாரிகளிடம் கடந்த ஆகஸ்ட் மாதம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில், நிரவ் மோடி லண்டனில் தங்கியிருப்பதாக பிரிட்டிஷ் அதிகாரிகள் இந்திய அரசிற்கு தகவல் தந்துள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கடந்த டிசம்பரில் தெரிவித்துள்ளது. தொடர்ந்து அவரை இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த நிலையில், மகாராஷ்டிராவின் ராய்காட் நகரில் அலிபாக் பகுதியில் நிரவ் மோடியின் பங்களா அமைந்துள்ள இடத்திற்கு சென்ற அரசு அதிகாரிகள் அதனை இடித்து தள்ளினர்.