வீரர்களின் மரணத்தினை வைத்து அரசியல் செய்வது கண்டனத்திற்கு உரியது; மம்தா பானர்ஜி

வீரர்களின் மரணத்தினை வைத்து அரசியல் செய்வது கண்டனத்திற்கு உரியது என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

Update: 2019-03-05 15:16 GMT
காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த 14ந்தேதி ஜெய்ஷ் இ முகமது இயக்க தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவ படையினர் பலியாகினர்.

இதனை தொடர்ந்து கடந்த 26ந்தேதி, பாகிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்த ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் முகாம்கள் மீது இந்திய விமான படை குண்டுகளை வீசி தாக்கி அழித்தது.  இதில் தீவிரவாதிகள், தீவிரவாத பயிற்சி பெறுவோர், தளபதிகள் உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர்.  இந்த தாக்குதலில் 250 தீவிரவாதிகள் பலியாகி உள்ளனர் என பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித்ஷா கூறினார்.

ஆனால் இந்த எண்ணிக்கையின் உண்மை தன்மை பற்றி காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.

இந்நிலையில், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று கூறும்பொழுது, வீரர்களின் ரத்தத்தினை கொண்டு தேர்தலில் நீங்கள் வெற்றி பெற முடியாது.  ஒரு வீரர் தனது நாட்டுக்காக ரத்தம் சிந்துகிறார்.  அவர்கள் நாட்டுக்காக சேவை ஆற்றுகிறார்கள்.  அவர்கள் அரசியலில் ஈடுபடுவதில்லை.  வீரர்களின் மரணத்தினை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு நான் கடும் கண்டனம் தெரிவிக்கிறேன் என கூறியுள்ளார்.

நாங்கள் மோடி மற்றும் பா.ஜ.க.வுக்கு எதிராக இருப்பவர்கள்.  மோடி பா.ஜ,.க.வை ஒரு தனியார் அமைப்பு போன்று மாற்றியிருக்கிறார்.  மோடிக்கு எதிராக யாரேனும் ஏதேனும் கூறினால், அந்நபர் பாகிஸ்தான் ஆதரவாளர் என முத்திரை குத்தப்படுகிறார்.  எனது தந்தை ஒரு சுதந்திர போராட்ட வீரர்.  அதனால் அவர்களிடம் இருந்து நான் தேசப்பற்றை கற்று கொள்ள மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்